காரைக்காலில் பைக் மோதி முதியவர் படுகாயம் சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

காரைக்கால், ஏப்.2: காரைக்காலில் சாலையை கடக்க முயன்ற முதியவர் பைக் மோதி காயமடைந்தார். பைக்கை ஓட்டிய எஸ்ஐ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

காரைக்கால் தலதெரு, கீழ வீதியை சேர்ந்தவர் வேல்முருகன்(67). தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். வேல்முருகன், அனந்தமங்கலத்தைச் சேர்ந்த பெருமாள் (68) இருவரும் ஆரம்பகால நண்பர்கள்.

கடந்த 27ம் தேதி வேல்முருகனை, பெருமாள் சந்தித்து விட்டு தலத்தெரு முருகு தோட்டம் பகுதியில் பாரதியார் சாலையை கடக்க முயன்றார். அப்போது நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த எஸ்.ஐ தனிக்கொடி என்பவர் ஓட்டிசென்ற பைக் பெருமாள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. அவருக்கு இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை வேல்முருகன் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து வேல்முருகன் காரைக்கால் வடக்கு போக்குவரத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சப்இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் எஸ்.ஐ தனிக்கொடி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: