×

பெண் கவுன்சிலர்களின் பணிகளில் கணவர் தலையிட்டால் நடவடிக்கை: மேயர் பிரியா எச்சரிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சியில் பெண் கவுன்சிலர்களின் பணியில் கணவர்கள் தலையிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என மேயர் பிரியா எச்சரித்துள்ளார். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வக கருத்தரங்கை மேயர் பிரியா நேற்று தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குநர் ரத்னா, உலக வங்கியின் முன்னோடி போக்குவரத்து வல்லுநர் ஜெரால்டு ஆலிவியர் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் மேயர் பிரியா நிருபர்களிடம் கூறியதவது: சென்னை மாநகராட்சியில் உள்ள நடமாடும் கழிப்பறைகளை பராமரிக்க ரூ.5.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்கள் இரவு நேரங்களில் பாதுகாப்புடன் சாலைகளில் பயணிக்க முதல்கட்டமாக 4 மற்றும் 5வது மண்டங்களில் தெருவிளக்கு இல்லாத பகுதிகளில் ரூ.69 கோடி மதிப்பில் தெருவிளக்கு அமைக்கவும், பொது இடங்களில் ரூ.33 கோடி மதிப்பில் புதிய கழிவறைகள் ஏற்படுத்தவும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது நவீன முறையிலும், பாதுகாப்பான முறையிலும் இருக்கவும், அதை பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் சுரங்கப் பாதைகள், நடைப்பாதைகளில் இரவு நேரங்களில் அதிக அளவு தெருவிளக்குகள் கிடையாது. அதனால் அதிக அளவில் சாலை விளக்குகள் அமைக்கப்பட உள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும். மேலும், சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள இலவச பொது கழிப்பறைகளை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதப்பட உள்ளது. மேலும், கவுன்சிலர்கள் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கவுன்சிலர்களின் பணிகள் என்ன என்பதை உணர்ந்து அவர்கள் பணியாற்ற வேண்டும். யாருக்கு பொறுப்பு வழங்கப்பட்டதோ அவர்கள்தான் பணியை செய்ய வேண்டும். பெண் கவுன்சிலர்களின் பணியில் கணவர்கள் தலையிட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Mayor ,Priya ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!