×

சவேரியார் ஆலய ஜங்ஷன் முதல் செட்டிகுளம் வரை இருவழிபாதையாகிறது: இன்று முதல் கோட்டார் வழியாக போக்குவரத்து

நாகர்கோவில், ஏப். 2: சவேரியார் ஆலய ஜங்ஷன் முதல் செட்டிகுளம்  வரை உள்ள சாலை இருவழிபாதையாக மாற்றப்படவுள்ளது.  இன்று முதல் கோட்டார் பகுதியில் போக்குவரத்து தொடங்கப்படும் என மேயர் தெரிவித்துள்ளார்.  நாகர்கோவில் மாநகராட்சி பகுதியை சுத்தமாகவும், அழகாகவும் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  குடிநீர், தெருவிளக்கு, மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை வழங்க மேயர் மகேஷ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். நாகர்கோவில் அனாதைமடம் மைதானத்தில் குவிக்கப்பட்டுள்ள மண்ணை அகற்ற வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. மண்ணை அங்கிருந்து அகற்றும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்து நிருபர்களிடம் கூறியதாவது: நாகர்கோவில் அனாதை மடம் மைதானத்தில் உள்ள மண் குவியல் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 இந்த மண் இரண்டு வாரத்திற்குள் அகற்றப்பட்டுவிடும். நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. கோட்டார் சாலையில் பாதாள சாக்கடைபணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் நாகர்கோவில் நகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் முடிப்பதாக தெரிவித்துள்ளனர்.  பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து இன்று(2ம் தேதி) முதல் கோட்டார் சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். சவேரியார் ஆலய ஜங்ஷனில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையின் இருபுறம் உள்ள ஆக்ரமிப்புகள் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் சாலை விரிவாக்கப்பணிகள் நடக்கும். சாலை விரிவாக்கம் செய்யப்பட்டபின் அந்த சாலையை இருவழிப்பாதையாக மாற்றவது தொடர்பாக போக்குவரத்து போலீசாரிடம் கலந்தாலோசனை நடத்தி முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.  கோட்டார் பகுதியில் நடந்து வரும் பாதாளசாக்கடை பணிகள் முடிந்து தற்போது மண், ஜல்லிகொண்டு நிரப்பும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் இன்று மதியம் வரை நடக்கும் என கூறப்படுகிறது. மண், ஜல்லி நிரப்பும் பணி முடிந்தவுடன் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

₹55 லட்சத்தில் சாலை பணி
மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ₹55 லட்சம் செலவில் நாகர்கோவில் வேதநகர் சானல்கரை சாலை சீரமைப்பு பணி நேற்று தொடங்கியது. பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, பொறியாளர் பாலசுப்பிரமணியன், திமுக பொருளாளர் கேட்சன், கோட்ட தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சிலர்கள் சுப்பிரமணியம், ஸ்டாலின், ஜெனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Saveriyar Temple Junction ,Chettikulam ,Kottar ,
× RELATED நீயும் நானும் வேற இல்ல காவலர் –...