×

குலசேகரன் குழுவை செயல்பட அனுமதிக்க வேண்டும்

விழுப்புரம், ஏப். 2: குலசேகரன் குழுவை செயல்பட அனுமதிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வலியுறுத்தி உள்ளார்.  விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், இட ஒதுக்கீடு வழங்குவதில் முன்னோடி மாநிலம் தமிழகமாகும். இன்று மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என தீர்ப்பு கூறியுள்ளது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. முழுமையான சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட 1985ம் ஆண்டு கொடுக்கப்பட்ட அம்பா சங்கர் அறிக்கையின் படி மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி பிரிவு உருவாக்கப்பட்டது. 50 சதவீதம் இருந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு கொடுக்கப்பட்டது. அதன் பின் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. இந்த அறிக்கையை ஏன் அரசு மதுரை உயர்நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யவில்லை? கவனக்குறைவாக விடப்பட்டதா? அல்லது திட்டமிட்டு விடப்பட்டதா? என்று அரசு தெளிவுப்படுத்த
வேண்டும்.

இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என ஒப்புக்கொண்ட நீதிமன்றம் முழுமையான தரவுகள் இல்லை என சொல்லியுள்ளது. அம்பா சங்கர் அறிக்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அரசு சொல்கிறது. ஆனால் 2010ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது அப்போதைய முதல்வர் கருணாநிதி, அம்பா சங்கர் அறிக்கையின்பேரில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என தெரிவித்தார். இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இன்றுவரை தொடர்கிறது. 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும் என்றால் முழுமையான சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்று 21.12.2020ம் தேதி புதிதாக முன்னாள் நீதிபதி குலசேகரன் தலைமையிலான குழு ஆரம்பிக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு இதை நடைமுறைப்படுத்தவில்லை. இட ஒதுக்கீடு வழக்கில் மூத்த வழக்கறிஞரை வைத்து வாதாடவில்லை.? உடனே குலசேகரன் குழுவை செயல்பட அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டை காப்பாற்ற முடியும். பாலியல் வன்கொடுமையை கண்டித்து விரைவில் விழுப்புரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். என்றார். அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை பற்றி கேள்வி எழுப்பியபோது பதில் கூறாமல் மழுப்பலாக அங்கிருந்து சென்றார். அப்போது எம்எல்ஏக்கள் வானூர் சக்கரபாணி, திண்டிவனம் அர்ஜூனன் உள்ளிட்ட அதிமுகவினர் உடனிருந்தனர்.

Tags : Kulasekara ,
× RELATED குலசேகரத்தில் ஒரே நாளில் 10 கடைகளை உடைத்து திருட்டு