×

திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் இன்று பூக்குழி திருவிழா கோயில் நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகள் தயார்

திருவில்லிபுத்தூர், மார்ச் 31: திருவில்லிபுத்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கடந்த மார்ச் 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார். மேலும் பல்வேறு மண்டபங்களில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் விழா முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா இன்று (மார்ச் 31) மதியம் ஒரு மணிக்கு மேல் நடைபெறுகிறது.
10 ஆயித்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்க உள்ளதால், பெரிய மாரியம்மன் கோயில் நிர்வாகத்தின் சார்பில் நிர்வாக அதிகாரி கலாராணி தலைமையில் கோயில் ஊழியர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர். அதிகளவில் பக்தர்கள் பூக்குழி இறங்குவதால் கோயில் அருகே தனித்தனியாக நெரிசலின்றி பூக்குழி இறங்கும் வகையில், தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. திருவிழாவை முன்னிட்டு, கோயில் அருகே தீயணைப்பு துறையினரும், ஆம்புலன்ஸ் வாகனத்தையும் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில் திருட்டு மற்றும் சமூக விரோத செயல்களை தடுப்பதற்காக திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரிநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள், போலீசார், ஊர்க்காவல் படையினர், என்எஸ்எஸ் மாணவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பூக்குழி திருவிழா காரணமாக, கோயில் வளாகம் மற்றும் கோயிலை சுற்றியுள்ள பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளது. நாளை தேரோட்டம் நடைபெறவுள்ளது.

Tags : Pookkuzhi Festival Temple Management ,Big Mariamman Temple ,Srivilliputhur ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன்...