கீழக்கரை பஸ் நிலையத்தில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

கீழக்கரை, மார்ச் 31:  கீழக்கரை நகராட்சி கூட்டம் தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ஹமீது சுல்த்தான்,  நகராட்சி ஆணையாளர் செல்வராஜ்,பொறியாளர் மீரான் அலி, துப்புரவு இன்ஸ்பெக்டர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே நடந்த விவாதங்கள்: 2வது வார்டு ஜெயலட்சுமி: காவிரி குடிநீர் எங்கள் பகுதிக்கு முறையாக வழங்குவது கிடையாது. பெண்கள் பணிக்குச் சென்ற இடைப்பட்ட நேரத்தில் திறந்து விடுகின்றனர். சில சமயம் இரவு நேரங்களில் காவிரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தூக்கத்தை விட்டு குழாயடியில் காத்துக்கிடக்கும் நிலைமை உள்ளது.

19வது வார்டு நவாஸ்: கிழக்கு தெருவில் குப்பைகள் அகற்றப்பட்ட இடத்தில் பம்பிங் ஸ்டேஷன் அமைக்கக்கூடாது. அந்த இடத்தில் சிறுவர் பூங்கா ஏற்படுத்த வேண்டும். 1வது வார்டு பாதுஷா: வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி உள்ளது. அதை முறைப்படுத்த வேண்டும். சீதக்காதி சாலையில் உள்ள மயானத்தை சுத்தப்படுத்த வேண்டும். கீழக்கரையில் நுழையும் வாகனங்களுக்கு கட்டணம் எவ்வளவு என்பதை போர்டு வைக்க வேண்டும். 4வது வார்டு சூரியகலா: கீழக்கரை பஸ் நிலையத்தில் சமூக விரோதிகளின் நடமாட்டம் இரவு நேரங்களில் அதிகரித்து உள்ளதால், அந்த பகுதியில் மக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். ஆகவே அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். 8வது வார்டு கவுன்சிலர் காசிம்: இனி நடக்கும் கூட்டங்கள் தொடர்பான தீர்மானத்தை பத்து நாட்கள் முன்பாகவே வார்டுகள் கவுன்சிலர்கள் நகர்மன்ற தலைவரிடம் இடம் தனித்தனியாக கொடுக்க வேண்டும் என்றார்.

14வது வார்டு கவுன்சிலர் ஹாஜா சுஐபு: இந்தியா திட்டத்தின் கீழ் ஒன்றரை லட்சம் மதிப்பிலான குப்பைகளை சேகரிக்கும் 22 வண்டிகள் 2018ல் வாங்கப்பட்டது. சாலை மற்றும் குறுகலான தெருக்களில் செல்வதற்கு இந்த வாகனம் வசதியாக இருந்தது.

ஆனால் இப்போது 4 வண்டிகள் மட்டும்தான் இயங்குகிறது. மற்ற 18 வண்டிகளிள் மின் கலம் பழுதடைந்து செயல்படாமல் கிடப்பில் உள்ளது. அதை சரி செய்து குப்பைகளை சேகரிக்க பயன்படுத்த வேண்டும். 20வது வார்டு கவுன்சிலர் சேக் உசைன்: கீழக்கரைக்கு வரும் வாகனத்திற்கான நுழைவு கட்டணம் அதிகமாக வாங்குவதாக வாகன ஓட்டிகள் புகார் அளிக்கின்றனர். ஆகையால் கீழக்கரையில் நுழைவு கட்டணத்திற்கான போர்டு அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். தலைவர்: உறுப்பினர்களின் கோரிக்கை அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. உடனடி நடவடிக்கை எடுக்கபபடும்.

இவ்வாறு விவாதம் நடந்து. கூட்டத்திற்கு அனைத்து நகராட்சி கவுன்சிலர்களும் வருகை தந்தனர்.

Related Stories: