காரைக்கால், மார்ச் 30: இந்தியளவில் நடைபெற்ற நீளம் தாண்டுதல் போட்டியில் காரைக்காலை சேர்ந்த விஏஓ பிரபாகரன் கலந்துகொண்டு வெற்றிபெற்று தங்கம் வென்று சாதனை படைத்தார்.ஹரியானா மாநிலம் குர்ஹானில் இந்திய அளவிலான சிவில் சர்வீஸ் தடகளப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தடகள போட்டியில் பேட்மிட்டன், கபடி, தடகளம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் தடகள பிரிவில் நீளம் தாண்டுதலில் காரைக்கால் தலத்தெருவை சேர்ந்த பிரபாகரன் பங்கேற்றார். இவர் திருநள்ளாறு பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தியளவிலான நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று 5.70 மீட்டர் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். இந்தியளவில் நடைபெற்று வரும் இந்த தடகள போட்டியில் காரைக்காலை சேர்ந்த விஏஓ பிரபாகரன் பங்கேற்று தங்கப்பதக்கத்தை பெற்றிருப்பது காரைக்கால் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.