இன்று பண்ருட்டி நகரமன்ற துணைத்தலைவர் தேர்தல் அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் ஆலோசனை

பண்ருட்டி, மார்ச் 26: பண்ருட்டி நகராட்சி 33 வார்டு பகுதியில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுகவில் 24 கவுன்சிலர்கள் வெற்றிபெற்றனர். அதிமுக 7, சுயேச்சை 2 ஆகும். கடந்த 4ம் தேதி தலைவருக்கான தேர்தல் நடந்தது. இதில் கவுன்சிலர்கள் ராஜேந்திரன், சிவா ஆகியோர் போட்டியிட்டனர். ராஜேந்திரன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தல் அலுவலர் மகேஸ்வரி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ராஜேந்திரனுக்கு வழங்கினார். மாலையில் துணைத்தலைவருக்கான தேர்தல் நடத்துவதற்கான பணிகள் நடைபெற்றன. ஆனால் போதிய கவுன்சிலர்கள் வராததால் துணைத்தலைவர் தேர்தல் மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் இன்று (26ம் தேதி) தள்ளி வைக்கப்பட்ட தலைவர், துணைத்தலைவர்களுக்கான மறைமுக தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து நேற்று திருவதிகை தனியார் மண்டபத்தில் தொழிலாளர் துறை அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான சி.வெ.கணேசன் தலமையில் திடீர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் அணைவரும் துணைத்தலைவர் தேர்தலில் நிற்கும் கவுன்சிலர் சிவாவுக்கு முழு ஆதரவு அளித்து வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இதன்பேரில் அனைத்து கவுன்சிலர்களும் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டனர். இதனால் இன்று நடைபெறும் துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் அமைதியான முறையில் நடைபெற நகராட்சி நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

Related Stories: