×

கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் சம்மந்தம் கலக்கும் போராட்டம்

புவனகிரி, மார்ச் 26:  சிதம்பரம் அருகே கீரப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் எம்ஜிஆர் சமுதாய நலக்கூடம் உள்ளது. இந்த சமுதாய நலக்கூடம் பாழடைந்து வீணாகி பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. இதை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.ஆனால் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சம்மந்தம் கலக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கீரப்பாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் செல்லையா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், வாஞ்சிநாதன் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்டோர் நேற்று கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு திரண்டனர்.

பின்னர் தாம்பாள தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், பூ, பட்டுப்புடவை உள்ளிட்ட பொருட்களை வைத்து மேள, தாலங்கள் முழங்க ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் ஊர்வலமாக சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் தரையில் அமர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் சமுதாய நலக்கூடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது, தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு உள்ளதாகவும், கோரிக்கை நிறைவேறாவிட்டால் மீண்டும் அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.

Tags : Keerappalayam Panchayat Union Office Former Marxist Comm ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை