×

சைமா-பவர் டேபிள் சங்கங்கள் இடையே கட்டண உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்


திருப்பூர்,மார்ச்26: பவர் டேபிள் கட்டண உயர்வை நிர்ணயிப்பதற்கான பேச்சுவார்த்தை ஆடை உற்பத்தியாளர்கள் தரப்பில் சைமா சங்கம் மற்றும் பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கம் இடையே நடந்து வருகிறது. கட்டண உயர்வு படி முதல் ஆண்டு 30 சதவீதமும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலா 15 சதவீதம் என மொத்தம் 75 சதவீதம் கட்டண உயர்வு வழங்க வேண்டும் என பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். இதன் பின்னர் சைமா சங்க செயற்குழு கூட்டத்தில் ஆடைகளுக்கு ரகம் வாரியாக கட்டண உயர்வு நிர்ணயிப்பது என முடிவு செய்தனர். இதனை பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் சைமா சங்க அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கத்துடன் 7வது கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.

இதில் சைமா சங்க தலைவர் வைக்கிங் ஈஸ்வரன், உதவி தலைவர் கோவிந்தசாமி, பொதுச்செயலாளர் பொன்னுசாமி, பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்க தலைவர் நாகராஜ், செயலாளர் நந்தகோபால், உதவி செயலாளர் முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் தற்போதைய மூலப்பொருட்களின் விலை உயர்வு, தொழிலின் நிலையை கருத்தில்கொண்டு கட்டண உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த வாரம் நடைபெறுகிற 8-வது கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Saima-Power Table Associations ,
× RELATED உடுமலை அருகே திடீர் சாலை மறியல்