×

கீழ்பவானி கசிவு நீர் பாசன சபை தேர்தலை ரத்து செய்ய வேண்டும்

ஈரோடு, மார்ச் 26: பாசன சபைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தார். இதில், விவசாய சங்கங்களின் பிரதி நிதிகள், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து நேரில் மனு அளித்தும், கோரிக்கைகளை முன்வைத்தும் பேசினர். அப்போது, “கீழ்பவானி கசிவு நீர் பாசன சபைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் குறித்து முறையான, தெளிவான செயல்பாடுகள் எதுவும் இல்லை. வாக்காளர் பட்டியல் கூட வெளியிடப்படவில்லை.

எனவே, இந்த தேர்தலை ரத்து செய்யவேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் பணியால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே கான்கிரீட் அமைக்கப்பட்டுள்ள வாய்க்கால்களால் அது தோல்வியடைந்த திட்டம் என நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கான்கிரீட் அமைப்பது பணத்தை வீணாக்கும் செயலாகும். இதனால் விவசாயிகளும் கடும் பாதிப்புக்குள்ளாவர். எனவே இத்திட்டத்தை கைவிட வேண்டும். மேலும் வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அத்து நிர்ணயம் செய்ய வேண்டும். அது மீண்டும் ஆக்கிரமிக்கப்படாமல் இருக்க பனை விதைகளை நட்டு பாதுகாக்க வேண்டும்.

நிலவரி நஞ்சை நிலத்துக்கு ரூ.5ம், புஞ்சை நிலத்துக்கு ரூ.2ம் என வசூலிக்கப்படுகிறது. ஆனால், வரி செலுத்துபவர்கள் நிலமே இல்லாதவர்களாக உள்ளனர். எனவே அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும். மானிய விலையில் விவசாயிகளுக்கு செம்மரம், சந்தனமரக் கன்றுகள் வழங்கப்போவதாக அரசு அறிவித்துள்ளது. இது விவசாயிகளுக்கு பலனை தராது. மாறாக அவர்களை இன்னலுக்குள்ளாக்கவே செய்யும். எனவே, இத்திட்டம் விவசாயிகளுக்கு வேண்டாம்.  பல்வேறு பிரச்னைகள் குறித்து வருவாய்க் கோட்டாட்சியரை சந்திக்கச் சென்றால் அவர் விவசாயிகளை சந்திப்பதே இல்லை. இது எங்களை கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளது.  

மஞ்சள் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், மஞ்சள் விவசாயிகளை பாதுகாக்க நிவாரணம் வழங்கவேண்டும். வயல்களினூடாக செல்லும் மின் கம்பிகள் மிகவும் கீழாக-கரும்புப் பயிர்களில் மோதும் அளவுக்கு தொங்குவதால் அபாயகரமான சூழல் நிலவுகிறது. எனவே, அவற்றை இழுத்து கட்டி சரி செய்ய மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்கள் அரசு நிலங்களில் தான் செயல்படவேண்டும் என அரசு அறிவித்துள்ள நிலையில், விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ. 35 வரை அதிகாரிகள் வசூலித்து வருவது முறையற்ற செயலாகும்.

எனவே, நெல் கொள்முதல் மையங்களில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தடப்பள்ளி அரக்கன்கோட்டை கால்வாய் கரையை கிராவல் மண் மூலமாக பலப்படுத்த அரசு அனுமதி அளித்து 2 வருடங்களாகியும் அதற்கு கனிம வளத் துறை அனுமதி தராமல் காலம் தாழ்த்தி வருகிறது. இப்பணியை தொடங்க ஆவண செய்ய வேண்டும்.
2006ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட வன உரிமைச் சட்டத்துக்கு புறம்பாக வனத்துறையினர் செயல்படுவது தவிர்க்கப்பட வேண்டும். பர்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி மலைகளில் வசித்து வரும் மலைவாழ் பழங்குடி மக்களிடம் அவர்களது உற்பத்திப் பொருள்களை சேகரித்து விற்பனை செய்ய ஒவ்வொருவரிடமும் வனத்துறையினர் ரூ.15 வசூலிப்பதை தடுக்க வேண்டும்.

கொப்பரை ஏலத்தில் நிலவி வரும் சாக்கு பிரச்னைக்கு கலெக்டர் தலைமையில் முத்தரப்புக் கூட்டம் நடத்தி உரிய தீர்வுகாண வேண்டும். தேங்காய் எண்ணெய் மீது விதிக்கப்பட்டுள்ள 30 சதவீதம் வரியை குறைக்க வேண்டும். உரத் தட்டுப்பாட்டை களைய வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து முந்தைய  கூட்டங்களில் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளின் அலுவலர்கள் விளக்கமளிக்குமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக் கொண்டார்.  அதைத் தொடர்ந்து அலுவலர்கள் விளக்கமளித்தனர். இக்கூட்டத்தில், விவசாயிகள், சங்கங்களின் பிரதி நிதிகள், துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Kizhpavani Leak Water Irrigation Board ,
× RELATED ஈரோடு பஸ் ஸ்டாண்டிற்குள் போக்குவரத்து மாற்றம்