உயர்நிலை பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை; குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் இல்லை; அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள் போராட்டம்: ஊத்துக்கோட்டை அருகே பரபரப்பு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே மாளந்தூர் கிராமத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளதால், ஆசிரியர்களை உடனடியாக நியமிக்கக்கோரி, அரசு உயர்நிலைப்பள்ளியை மாணவர்கள், பொதுமக்கள் பூட்டு போட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஊத்துக்கோட்டை அருகே மாளந்தூர்  கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு மாளந்தூர், கல்பட்டு, ஆவாதிபேட்டை, சீத்தஞ்சேரி உள்பட பல கிராமங்களை சேர்ந்த 260 மாணவ, மாணவிகள் 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கின்றனர். இப்பள்ளியில், முறையாக 12 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 5 பேர் மட்டுமே உள்ளனர். 7 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளது.

இதனால், மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பள்ளியில் அரசு சார்பில் சத்துணவு வழங்கப்பட்டாலும், அதை சமைப்பதற்கு தனி அறை இல்லை. இதனால், வகுப்பறையில் சத்துணவு சமைக்கப்படுகிறது. மாணவர்களுக்கான குடிநீர் வசதியும் இல்லை. அவர்களுக்கு ஆர்ஓ பிளான்ட் அமைத்து கொடுத்தபோதிலும், முறையாக குடிநீர் வசதி செய்யவில்லை என பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக பள்ளியை சுற்றி வனப்பகுதியாக உள்ளது. இங்கு பாம்பு உள்பட விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. மழை காலங்களில், விஷப்பூச்சிகள் பள்ளி வகுப்பறையில் புகுந்துவிடுவதால், மாணவர்கள் அச்சத்துடன் உள்ளனர்.

இரவு நேரம் மட்டுமின்றி பகல் நேரங்களிலும், அப்பகுதியில் சுற்றும் கால்நடைகள், பள்ளி அருகே படுத்து கொள்கின்றன. சில நேரங்களில், மாணவர்கள் அவ்வழியாக செல்லும்போது, மாடுகள் முட்டி அவர்கள் படுகாயம் அடைவது தொடர்கதைகயாக உள்ளது. இதையொட்டி, பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும், எவ்வித நடவடிக்கையும் இதுவரை அதிகாரிகள் எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக, மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில், மாளந்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், பற்றாக்குறையாக உள்ள ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், குடிநீர், சமையல் அறை என கடந்த சில நாட்களுக்கு முன் திருவள்ளூர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை.

இந்நிலையில், நேற்று காலை மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்றனர். பின்னர், பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளை கண்டித்து, வகுப்பை புறக்கணித்து வெளியேறிய அவர்கள், பள்ளிக்கு பூட்டு போட்டு பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து ஊத்துக்கோட்டை தாசில்தார் ரமேஷ், டிஎஸ்பி சாரதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் சமரசம் பேசினர். அப்போது, விரைவில் பற்றாக்குறையாக உள்ள ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என உறுதியளித்தனர். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மாளந்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 260 மாணவர்கள் படிக்கிறார்கள்.

இங்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை மட்டுமின்றி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதியும் இல்லை. ஆசிரியர்கள் இல்லாததால், மதிய உணவுக்கு பின், மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிவிடுகின்றனர். இதனால் அவர்களது கல்வி கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், வனப்பகுதியில் உள்ள விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கிராம பகுதியில் பள்ளி அமைந்துள்ளதால், போக்குவரத்து வசதி இல்லை. இதனால், இப்பள்ளியில் பணியாற்ற ஆசிரியர்கள் யாரும் வருவதில்லை. அதிலும் வலுக்கட்டாயமாக யாரேனும் வந்தால், அவர்கள் ஓரிரு மாதங்களில், மருத்துவ விடுப்பு எடுத்து, பணியிட மாற்றத்துடன் பெட்டியை கட்டி சென்றுவிடுகின்றனர். இதனை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: