எல்லை பாதுகாப்பு படையில் பெண்கள் சேர வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசார பயணம்

தர்மபுரி, மார்ச் 26: எல்லை பாதுகாப்பு படையில் பெண்கள் சேர வலியுறுத்தி, புல்லட் வாகனத்தில் விழிப்புணர்வு பிரசார பயணம் மேற்கொண்டுள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படை பெண் வீரர்களுக்கு தர்மபுரியில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் மகளிர் அதிக அளவில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்திய எல்லை பாதுகாப்பு படையின் பெண் வீரர்கள் குழுவினர் இருசக்கர வாகன பயணம் மேற்கொண்டு வருகிறனர். இந்திய வடபகுதி எல்லையான வாகாவில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பயணம், கன்னியாகுமரி சென்று சென்னையில் நிறைவடைய உள்ளது. இந்த விழிப்புணர்வு பயணக் குழுவினர் நேற்று முன்தினம் மாலை  தர்மபுரி வந்தடைந்தனர். அவர்களுக்கு மாவட்ட எல்லையில் பொதுமக்கள், கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். கடந்த 5ம் தேதி வாகா எல்லையில் தொடங்கிய பிரசார பயணம் சுமார் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்துள்ளது.

புதுடெல்லி, பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை கடந்து இந்தக் குழுவினர் தற்போது தமிழகத்தில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். இந்திய பாதுகாப்பு படையில் பெண் வீரர்கள் பங்கேற்கும் முதல் விழிப்புணர்வு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயணக்குழுவினர் சேலம், நாமக்கல், கரூர் மற்றும் மதுரை வழியாக கன்னியாகுமரி சென்று சென்னையில் வரும் 28ம் தேதி விழிப்புணர்வு பயணத்தை நிறைவு செய்ய உள்ளனர். எல்லை பாதுகாப்புப படை பெண் கமாண்டோ வீரர் கீர்த்தனா தலைமையில் இந்த குழுவினரின் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தக் குழுவினருக்கு தர்மபுரியில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாதுகாப்பு படை உயர் அலுவலர் யாதவ், முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் நலச்சங்க மாநில தலைவர் சீனிவாசன், தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: