×

மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு எதிரொலி தோகைமலை பகுதி நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்

தோகைமலை, மார்ச் 26: கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் குளித்தலை ஆர்டிஓ புஷ்பாதேவி தலைமையில் நீர்நிலை பகுதிகளை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
உயர்நீதி மன்ற மதுரை கிளையின் உத்தரவை அடுத்து நீர்நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தோகைமலை ஒன்றியத்தில் உள்ள பாசன ஏரி குளங்கள் மற்றும் ஆற்றுவாரி பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து உள்ள குடியிருப்புகள், விவசாய வயல்களை ஆய்வு செய்து ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றி வருகின்றனர்.முதல்கட்டமாக பொருந்தலூர் ஊராட்சியில் உள்ள வீரமலை வனப்பகுதியில் இருந்து தெலுங்கபட்டி வழியாக பாதிரிபட்டி குளத்திற்கு செல்லும் ஆற்றுவாரி பகுதிகளில் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.

இதேபோல் கூடலூர் ஊராட்சி நாச்சாகவுண்டனூரில் உள்ள 2.50 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்ணூத்தான்குளத்தில் 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்து வாழை சாகுபடி செய்த வயலை ஜேசிபி இயந்திரம் மூலம் அதிகாரிகள் அழித்தனர். மேலும் வடசேரி ஊராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 340 ஏக்கர் பரப்பளவு கொண்ட வடசேரி பெரியஏரியில் சுமார் 50 ஏக்கருக்கும் மேல் ஆக்கிரமிப்பு செய்து உள்ள பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் 2 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த வயலை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர்.

இதேபோல் தோகைமலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும் என்றும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ஆர்டிஓ புஷ்பாதேவி தெரிவித்தார்.
மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது இடையூறு செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். இந்த ஆய்வின்போது தோகைமலை ஒன்றிய ஆணையர் விஜயகுமார், பொதுப்பணிதுறை பொறியாளர் திவ்யா மற்றும் ஊராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags : Madurai ,Togaimalai ,
× RELATED உத்தபுரம் கோயில் வழக்கு: ஆட்சியர் பதில்தர ஆணை