பேராவூரணி பகுதியில் ரயில்வே கீழ் பாலங்களால் இடையூறு சமாதான கூட்டத்தில் மக்கள் புகார்

பேராவூரணி , மார்ச்25: பேராவூரணி பகுதியில் ரயில்வே கீழ் பாலங்களால் இடையூறு உள்ளது என சமாதானக் கூட்டத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்ததால் பட்டுக்கோட்டை ஆர்டிஒ பிரபாகரன் ரயில்வே கீழ்பாலங்களை ஆய்வு செய்தார்.பேராவூரணி அருகே உள்ள சொர்ணக்காடு கிராமத்தில், காரைக்குடி - திருவாரூர் அகல ரயில்பாதை வழித்தடத்தில், ஆளில்லா ரயில்வே கேட் எண்: எல்.சி:132 உள்ளது. தற்போது இதனருகே ரயில்வே கீழ் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.முறையான வடிவமைப்பு இல்லாமல் பாலம் வளைந்து, நெளிந்து இருப்பதால், பேருந்துகள், விவசாயப் பணிகளுக்கு டிராக்டர், கதிர் அறுக்கும் இயந்திரம் போன்றவை பாலத்தை கடந்து செல்ல முடியாமல், நடுவில் சிக்கிக் கொள்வதாலும,மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பாலத்தை கடக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதையடுத்து இந்தப் பாலத்தை பயன்படுத்தும் சொர்ணக்காடு, வளப்பிரமன்காடு, மணக்காடு, மாத்தூர் ராமசாமிபுரம், ரெட்டவயல், பின்னவாசல் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள்கடந்த சில மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதே போல் பேராவூரணி நீலகண்டபுரம் எல்.சி.121: ரயில்வே கேட் கீழ் பாலம், மாவடுகுறிச்சி கீழக்காடு எல்.சி.116 சிஇ2: ரயில்வே கீழ் பாலம் ஆகியவற்றிலும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நின்று வாகனங்கள் கடக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.தற்போது புதிதாக ஆத்தாளூரில் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் எல்.சி.117 சி.இ. 2 ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடி விட்டு இதனருகே ரயில்வே கீழ் பாலம் அமைக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. பணிகள் தொடங்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதுகுறித்து அண்மையில் பட்டுக்கோட்டை ஆர்டிஓ அலுவலகத்தில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, பொதுமக்கள் தங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்தும், புதிதாக கீழ்பாலம் அமைக்க கூடாதென தெரிவித்தனர். இதையடுத்து நேரில் ஆய்வு செய்வதாக ஆர்டிஒ தெரிவித்திருந்தார்.

அதன்படி புதிதாக பாலம் அமைக்கவுள்ள ஆத்தாளூர் ரயில்வே கேட்டை ஆய்வு செய்ய வந்த ஆர்டிஓ பிரபாகரனை ஆத்தாளூர் பகுதி மக்கள் சந்தித்து இப்பகுதியில் புதியதாக கீழ்பாலம் அமைக்கப்பட்டால் ஆத்தாளூர் வீரகாளி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படக்கூடும். மற்ற இடங்களில் அமைக்கப்பட்ட கீழ் பாலங்களால் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். எனவே இங்கு கீழ் பாலம் அமைக்க கூடாது என வலியுறுத்தினர். பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து ரயில்வே துறை அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாக ஆர்டிஓ தெரிவித்தார்.

Related Stories: