வேலாயுதம்பாளையம் அருகே ஓலப்பாளையம் நொய்யல் கிளை வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வேலாயுதம்பாளையம், மார்ச் 25: வேலாயுதம்பாளையம் அருகே ஓலப்பாளையத்தில் நொய்யல் வாய்க்காலின் கிளை வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்புகளை புகளூர் தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் அகற்றினர்.புகளூர் தாலுகா வேட்டமங்கலம் கிராமம் ஓலப்பாளையம் பகுதியில் உள்ள நிலத்தில் 3 கிலோ மீட்டர் நீளம், 6 மீட்டர் அகலம் கொண்ட நொய்யல் கிளை வாய்க்காலில் மண் கொட்டி நிரப்பி சிலர் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதனால் அக்கிளை வாய்க்காலின் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு வாய்க்கால் தண்ணீர் செல்வது தடைபட்டது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலெக்டர் மற்றும் புகளூர் தாசில்தாரிடம் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து உள்ள பகுதிகளை உடனடியாக வருவாய்த்துறையினர் அகற்றவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஓலப்பாளையம் பகுதியில் நொய்யல் கிளை வாய்க்காலில் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை அகற்ற நேற்று புகளூர் தாசில்தார் மதிவாணன் தலைமையில் மண்டல துணைத் தாசில்தார் அன்பழகன், உதவிப் பொறியாளர்கள் (பாசன பிரிவு) சதீஷ்குமார், கார்த்தி, ஆர்ஐ ரஹமத்துல்லா, விஏஓ மலையப்பசாமி மற்றும் வருவாய் துறையினர், விவசாயிகள் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு ஜேசிபி இயந்திரம் மூலம் நொய்யல் கிளை வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்பை அகற்றினர்.

Related Stories: