×

பெரம்பூரில் குழந்தையை விற்ற விவகாரம் தாய் உள்பட 3 பெண்கள் சிறையில் அடைப்பு: 4 மாத குழந்தையாக மீட்பு

சென்னை:  சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த  45 வயது  பெண்,  குழந்தைகள் நல குழு உறுப்பினராக உள்ளார். இவர், ஆன்லைன் மூலம் புகார் மனு ஒன்றை செம்பியம் காவல் நிலையத்திற்கு அனுப்பி இருந்தார். அதில் பெரம்பூர் கண்ணபிரான் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த உதயா (29) என்ற  பெண்,  கடந்த டிசம்பர் மாதம் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பிறந்த குழந்தையை பணத்திற்காக விற்றுள்ளார்.  இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனதெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து,  செம்பியம் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்து விசாரித்தார்.  அதில், உதயா, கணவர் மணிகண்டன், 7 வயது மகனுடன் பெரம்பூர் கண்ணபிரான் கோயில் தெருவில் வசித்து வந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக மணிகண்டன் பிரிந்து சென்றுவிட்டார். இதை தொடர்ந்து,  உதயா திருமணம் செய்து கொள்ளாமல் பாபு என்பவருடன் குடும்பம் நடத்தியுள்ளார்.  இவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.  இதை ஆதிலட்சுமி  என்ற பெண் மூலம் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு ஈரோட்டை  சேர்ந்த ஒரு தம்பதிக்கு விற்றுள்ளனர்.

இதையடுத்து, இந்த வழக்கில் ஆர்வம் காட்டிய செம்பியம் போலீசார் ஆதிலட்சுமியிடமிருந்து குழந்தையை விற்க துணையாக இருந்த நாகலட்சுமி, ஜான்சிராணி உள்ளிட்ட நபர்களை பிடித்து விசாரித்தனர். அதில்,  குழந்தை, ஈரோடு புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த தங்கவேல் - சவீதா தம்பதிக்கு விற்கப்பட்டது தெரிந்தது.  இதற்கு கவிதா என்ற பெண் துணையாக இருந்துள்ளார். போலீசாரின் தொடர் விசாரணையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தங்கவேல் -சவீதா தம்பதிக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க விரும்பியுள்ளனர். அப்போது அவர்களுக்கு அறிமுகமான கவிதா என்பவர் மூலமாக ஜான்சிராணி என்பவர் அறிமுகமாகி உள்ளார். அவர் மூலமாக குழந்தை கைமாறி உள்ள தகவல் அம்பலமானது.

 எனவே, செம்பியம் போலீசார் ஜான்சிராணியை நேரில் அழைத்துக்கொண்டு ஈரோட்டுக்கு சென்று கவிதாவை பிடித்து அவர் மூலமாக தங்கவேல் மற்றும் சவீதா ஆகியோரை பிடித்துள்ளனர். அங்கு, நான்கு மாத குழந்தையாக வளரும் சத்ய சரணை மீட்டு நேற்று காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இந்த விசாரணையில்,  குழந்தையை விற்ற தாய் உதயா, அதற்கு உடந்தையாக இருந்த ஜான்சிராணி, குழந்தையை வாங்கிய சவீதா ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த செம்பியம் போலீசார்  அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Tags : Perambur ,
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது