×

காஞ்சிபுரத்தில் 443 இருளர் குடும்பங்களுக்கு இலவச வீடு கட்டித்தர 19.37 கோடி நிதி ஒப்பளிப்பு: அரசாணை வெளியீடு

சென்னை: காஞ்சிபுரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 443 பழங்குடி இனத்தைச் சார்ந்த இருளர் இன குடும்பங்களுக்கு இலவச வீடு கட்டித்தர ₹19.37 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்ட அரசாணை:ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் 2021-22ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது சட்டமன்றப் பேரவையில், ‘பெரும்பாலான பழங்குடியின மக்கள் பொருளாதாரத்தில் பின்தங்கி வாழ்ந்து வருகின்றனர். வீடற்ற பழங்குடியினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பட்டா வழங்கப்பட்ட 443 இருளர் இன பழங்குடியினர் குடும்பங்களுக்கு தலா ₹3 லட்சம் மதிப்பீட்டில் ₹13.29 கோடி மதிப்பீட்டில் 443 புதிய வீடுகள் கட்டப்படும்’ என அறிவிப்பு வெளியிட்டார்.

பழங்குடியினர் நல இயக்குநரின் கடிதத்தில், அழிவின் விளிம்பிலுள்ள பண்டைய பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் 31.12.2021 நாளிட்ட கடிதத்தில், நீலகிரி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 387 வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு தலா ₹3.5 லட்சம் மதிப்பீட்டில், ₹13,54,50,000 நிதி விடுவிக்கப்பட்டுள்ள நிதியினைக் கொண்டும், மேலும், பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டு செலவிடப்படாத நிதி ₹2,11,50,000ஐ கொண்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருளர் இன மக்களுக்கு வீடுகள் கட்ட பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. பழங்குடியினர் நல இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் ஆய்வு செய்ததின் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 443 பழங்குடி இனத்தைச் சார்ந்த இருளர் இன குடும்பங்களுக்கு இலவச வீடு கட்டித்தர ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மதிப்பீட்டின்படி ஒரு வீட்டிற்கு தலா ₹4,62,000 நிர்ணயம் செய்யப்பட்ட மொத்த தொகையில் 24,570 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழும், பழங்குடியினர் நல மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கு அனுமதிக்கக்கோறும் தொகை ₹4,37,430 வீதம் 443 வீடுகள் கட்டுவதற்கு ₹19,37,81,490ல் வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்திற்காக, பழங்குடியினர் நல இயக்குநரால் முந்தைய ஆண்டுகளில் பல்வேறு முந்தைய ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட செலவிடப்படாத நிதி ₹2,11,50,000 ஐ பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. மேலும், மீதமுள்ள தொகையான 13,54,50,000 ஐ அழிந்து வரும் நிலையிலுள்ள பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ₹3,71,81,490 ஐ பழங்குடியின மக்கள் அதிகமாக வாழும் கிராமப் பகுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.  

Tags : Kanchipuram ,
× RELATED பாமக திடீர் ஆர்ப்பாட்டம்