சென்னையில் வாட்ஸ்அப் குழு உருவாக்கி மாணவர்கள், நடிகர்களுக்கு கஞ்சா போதை மாத்திரை விற்றவர் கைது

சென்னை:சென்னையில் வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தி, அதன் மூலம் வசதி படைத்தவர்கள், கல்லூரி மாணவர்கள், நடிகர்களுக்கு போதை மாத்திரை, உயர் ரக கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு தகவல் கிடைத்தது. இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைத்து அவர் உத்தரவிட்டார். அதன்பேரில், தனிப்படை போலீசார், கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான கல்லூரி மாணவன் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர், வாட்ஸ்அப் குழுவில் போதைப் பொருட்களை வாங்கி, பயன்படுத்தியது தெரிந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் அந்த வாட்ஸ்அப் குழுவில் உள்ள நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். மேலும், பிடிபட்ட கல்லூரி மாணவன் பெயரில், வாட்ஸ்அப் குழுவில் கஞ்சா ஆர்டர் செய்து, அதனை கொண்டு வந்த தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஜீவா (24) என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில், கூடுவாஞ்சேரில் உள்ள தனியார் கல்லூரியில் ஜீவா படித்து வந்தபோது, போதைப்பொருள் உபயோகிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவரை பெற்றோர் மறுவாழ்வு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். அதன்பிறகு டெல்லி சென்ற ஜீவா, போதை மாத்திரை, கஞ்சா விற்கும் கும்பலுடன் தொடர்பு ஏற்படுத்திகொண்டு சென்னை திரும்பியுள்ளார். பின்னர், வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தி, அதன் மூலம் போதை மாத்திரை, உயர் ரக கஞ்சா கேட்கும் கல்லூரி மாணவர்கள், வசதிபடைத்தவர்கள், நடிகர்களுக்கு சப்ளை செய்து வந்துள்ளார். இவர், போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க பல்வேறு யுக்திகளை கையாண்டுள்ளார், என்பது தெரியவந்தது. இவரிடமிருந்து ஏராளமான போதை மாத்திரை, உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜீவாவுக்கும், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: