கூட்டுறவு மேலாண்மை விற்பனை சங்கத்தில் அடகு நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ்: எம்எல்ஏ மாதவரம் சுதர்சனம் வழங்கினார்

புழல்: கூட்டுறவு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் விழாவில், 178 பேருக்கு அடகு நகைக்கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடந்தது. கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை அடமானம் வைத்து, கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. இந்நிலையில்,  திமுக ஆட்சி அமைந்ததும் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதைதொடர்ந்து, செங்குன்றம் பகுதியில் இயங்கும் சைதாப்பேட்டை தாலுகா கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தில், 5 சவரன் நகைக்கடன் பெற்ற, 178 பேருக்கு, நகைக்கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ் மற்றும் அடகு வைத்த நகையை வழங்கும் நிகழ்ச்சி கூட்டுறவு சங்க வளாகத்தில் நடந்தது. கூட்டுறவு மேலாண் இயக்குனர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். பொது மேலாளர் நீதிராஜன், மேலாளர் தணிகாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதர்சனம் கலந்துகொண்டு, 178 பேருக்கு அடகு நகை மற்றும் நகைக்கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ்களை வழங்கினார். இதில்,  செங்குன்றம் பேரூர் திமுக செயலாளர் ராஜேந்திரன், பேரூராட்சி துணைத் தலைவர் விப்ரநாராயணன், பொதுக்குழு உறுப்பினர் ஜெய்மதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: