×

வாலாஜாபாத் - அவளூர் இடையே விபத்து அபாயத்தில் பாலாற்று தரைப்பாலம்: அச்சத்துடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் - அவளூர் இடையே பாலாற்று தரைப்பாலத்தில் தடுப்புகள், மின் விளக்குகள் இல்லாததால், பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பொதுமக்களும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் - அவளூர் இடையே பாலாற்று மையப் பகுதியில் தரைப்பாலம்  அமைந்துள்ளது.  இந்த தரை பாலத்தின் வழியாக 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் வேலை, வியாபாரம், பள்ளி, கல்லூரி, மருத்துவ தேவை என பல்வேறு காரணங்களுக்காக சென்று வருகின்றனர். மேலும், தனியார் தொழிற்சாலை பஸ்கள், கல் குவாரியில் இருந்து வெளிவரும் லாரிகள் என நூற்றுக்கணக்கான வாகனங்களும் இந்த தரைப்பாலத்தின் வழியாக சென்று வருகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த வடகிழக்கு பருவ மழையால், பாலாற்று படுகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலத்தின் சில பகுதிகள் தண்ணீரில் அடித்து சென்றன. அதில், பாலத்தில் இருந்து தடுப்பு சுவர்களும், மின்விளக்குகளும் மாயமாகின. இதனால், அந்த பாதையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையொட்டி, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் சிரமம் அடைந்தனர். தொடர்ந்து, தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், மாவட்ட நிர்வாகம் சார்பில், வாலாஜாபாத் - அவளூர் இடையே பாலாற்று தரைப்பாலத்தில் தற்காலிகமாக பாதை அமைக்கப்பட்டு, போக்குவரத்து தொடங்கியது.

இந்நிலையில், தற்காலிகமாக அமைக்கப்பட்ட தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் மற்றும் மின்கம்பங்கள் இல்லாமல் உள்ளது. இதனால், தரைப்பாலத்தில் இரவு நேரங்களில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் எதிரே வரும் லாரி, பஸ், வேன் ஆகிய வாகனங்களுக்கு வழிவிட முடியாமல், பாலத்தின் பக்கவாட்டில் உள்ள சரிவில் விழுந்து படுகாயமடைகின்றனர். மேலும், இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படுவதாக கூறுகின்றனர். எனவே, வாலாஜாபாத் - அவளூர் பாலாற்று தரைப்பாலத்தில் தடுப்புச்சுவர், மின்விளக்கு அமைக்க வேண்டும். பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பாதுகாப்பாக சென்றுவர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags : Walajabad ,Avalur ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...