×

பிஎம் கிசான் 11வது தவணை பெற வங்கி கணக்குடன் ஆதார் இணைக்க வேண்டும் கலெக்டர் அறிவிப்பு

ராமநாதபுரம், மார்ச் 22: ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் பிஎம் கிசான் 11வது தவணைத் தொகை பெற ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலமுள்ள விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வாங்க 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1.07 லட்சம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டம் துவங்கிய (2018 டிச.1 முதல் 2019 மார்ச் 31) வரை பதிவு செய்த விவசாயிகள் இதுவரை 10 தவணை தொகை பெற்றுள்ளனர். தற்போது, ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைத்துள்ள பயனாளிகளுக்கு மட்டும் 11வது தவணை தொகை விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை பயன்பெற்று வந்த மொத்த பயனாளிகளில் 20 ஆயிரத்து 368 பயனாளிகளின் வங்கி கணக்கு எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் உள்ளதாக தெரியவருகிறது. எனவே ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்காமல் உள்ள பிஎம் கிசான் திட்ட பயனாளிகள் உடனடியாக தங்கள் வங்கி கணக்கு வைத்துள்ள வங்கி கிளையை தொடர்பு கொண்டு ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்து 11வது தவணையை பெற்று பயனடையலாம் என கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.

Tags : BM Kisan ,
× RELATED பிஎம் கிசான் நிதி சிக்கலுக்கு...