×

திருப்புத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் நெடுமறம் மஞ்சுவிரட்டு ஆலோசனை கூட்டம்

திருப்புத்தூர், மார்ச் 23: திருப்புத்தூர் அருகே நெடுமறம் கிராமத்தில் மலையரசி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள மஞ்சுவிரட்டிற்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்னேற்பாடுகள், பாதுகாப்புகள், பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. திருப்புத்தூர் அருகே நெடுமறம் கிராமத்தில் மலையரசி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் இரு தேதிகளில் 2 மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். நாளை மார்ச் 24ம் தேதி நடைபெறும் மஞ்சுவிரட்டை நெடுமறம், சில்லாம்பட்டி, ஊக்குளத்தான்பட்டி, உடையநாதபுரம், என்.புதூர் ஆகிய 5 கிராமத்தார்கள் நடத்துவார்கள். அதேபோல் மார்ச் 30ம் தேதி நடைபெறும் மஞ்சுவிரட்டை நெடுமறம் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் நடத்துவார்கள். இந்த 2 மஞ்சுவிரட்டுகள் நடத்துவது தொடர்பாக திருப்புத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. தாசில்தார் வெங்கடேசன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மஞ்சுவிரட்டு பாதுகாப்பாக நடத்துவது குறித்தும், அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தினர். இதில் திருப்புத்தூர் டிஎஸ்பி ஆத்மநாபன், மண்டல துணை தாசில்தார் செல்லமுத்து, நெடுமறம் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கவாசகம், எம்ஆர்சி இளங்கோவன், திருப்புத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் மற்றும் நெடுமறம் கிராமத்தினர், சுகாதாம், கால்நடை, வருவாய், தீயணைப்பு துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Manjuvirattu ,Tiruputhur Tasildar Office ,
× RELATED காளையார்கோவில் அருகே கோயில் விழாவில் வடமாடு மஞ்சு விரட்டு