திருச்சி, மார்ச் 23: திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்டம் 64வது வார்டு கே.கே.நகர் எல்ஐசி காலனி, ஜெயம் நகர், முருகவேல் நகர், பொதுமக்கள் நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடியிருப்போர் நலச் சங்கங்கள் தங்கள் பகுதியில் குறைகளை மனுவாக அளித்தார்கள். அந்த மனுவை உடனடி தீர்வு காணும் வகையில் மேயர் அன்பழகன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு நடைபெற்ற பாதாள சாக்கடை திட்ட பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டு சாலைகளை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார்.
இதேபோல் ஜே.கே.நகர் விரிவாக்க பகுதி மக்கள் நலச் சங்கத் தலைவர் நேற்று கோரிக்கை மனுவை மேயரிடம் கொடுத்தார். அதன் பேரில் நேற்று மேயர் ஜே.கே.நகர் விரிவாக்கம் பகுதி மக்களின் நலன் கருதி உடனடியாக பொறியாளர்களுடன் ஆய்வு செய்தார். நிர்வாகிகள் மேயரிடம் கொட்டப்பட்டு குளத்து நீர் ஊருக்குள் வருவது பற்றியும், மழைநீர் வடிகால் மற்றும் சாலை வசதி அமைப்பது பற்றியும் நிர்வாகிகள் எடுத்துக் கூறியபோது, எல்லா பிரச்னைகளையும் விரைவில் தீர்த்து வைப்பதாக மேயர் உறுதி அளித்துள்ளார்.
இந்த ஆய்வில் துணை மேயர் திவ்யா, ஆணையர் முஜிபுர்ரகுமான், நகரப் பொறியாளர் அமுதவள்ளி, செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன் மற்றும் பலர் உடனிருந்தனர். குறைதீர் கூட்டத்தில் அளித்த மனு தொடர்பாக நேரில் ஆய்வு செய்த மேயர் பணிக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்து பாராட்டி வருகின்றனர்.
