×

நீடாமங்கலம் வேளாண். அறிவியல் நிலையத்தில் கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை பயிற்சி முகாம்

நீடாமங்கலம், மார்ச் 23: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கால்நடைகளுக்கான தீவன மேலாண்மை பற்றிய மூன்று நாள் பயிற்சி நடைபெற்றது.இப்பயிற்சியை துவக்கி வைத்து தலைமை உரையாற்றிய தஞ்சாவூர் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலைய தலைவர் ஜெகதீசன் நவீன உயர்ரக தீவனப்பயிர்களை உற்பத்தி செய்வதன் மூலம் அதிக பால் உற்பத்தி தரும் உயர் ரக கறவை பசுக்களை எளிதில் பராமரிக்க இயலும் என்றார்.நிலைய பொறுப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கமல சுந்தரி அனைவரையும் வரவேற்றார். விஞ்ஞானிகள் டாக்டர் கருணாகரன், டாக்டர் செல்வ முருகன், கீழ்வேளூர் விவசாய கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய சிறப்பு அலுவலர் டாக்டர் சந்திரசேகரன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விதை மைய இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

தினமும் மதிய வேளையில் பயிற்சியாளர்கள் அனைவரும் வேளாண்மை அறிவியல் நிலைய பண்ணைக்கு பண்ணை மேலாளர் நக்கீரனால் அழைத்துச் செல்லப்பட்டு நிலம் பண்படுத்துதல் மற்றும் தீவன விதைகளை நடவு செய்தல் போன்றவற்றை செய்முறையில் செய்து பயிற்சி பெற்றனர். பயிற்சியின் மூன்றாவது நாளில் விவசாயிகள் அனைவரும் நன்னிலம் அருகிலுள்ள வாழ்க்கை கிராமத்தில் உள்ள ஆட்டுப்பண்ணைக்கு கண்டுணர்வு சுற்றுலா சென்றனர். அங்கு தீவனத்திற்காக சவுண்டல் மரங்கள் தோப்பாக பயிரிடப்பட்டு தீவன அறுவடை செய்வதை கண்டு அறிந்தனர். ஆட்டுப் பண்ணை மேலாளர் முனாஃபர் வேலிமசால் மற்றும் சூப்பர் நேப்பியர் புல் போன்றவற்றை களிமண் தரையான தனது பண்ணையில் எவ்வாறு வெற்றிகரமாக சாகுபடி செய்தார் என்பது பற்றி எடுத்துரைத்தார்.
பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் நிலைய திட்ட அலுவலர்களான சகுந்தலா மற்றும் ரேகா செய்திருந்தனர்.

Tags : Needamangalam Agriculture ,Livestock ,Training ,Science ,
× RELATED தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்