×

நத்தம் மாரியம்மன் கோயிலில் இன்று பூக்குழி திருவிழா: பல்லாயிரக்கணக்கில் குவியும் பக்தர்கள்

நத்தம், மார்ச் 22: திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் மாசிப்பெருந்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 11, 15, 18 ஆகிய தேதிகளில் அம்மன் சர்வஅலங்காரத்தில் மயில், சிம்மம், அன்னம் போன்ற வாகனங்களில் எழுந்தருளி மின்ரதத்தில் நகரின் முக்கிய வீதிகளில் பவனி வந்து அருள் பாலித்தார். அப்போது பக்தர்கள் ஆங்காங்கே குவிந்து தரிசனம் செய்து வழிபட்டனர். விழாவில் நேற்று காலை அம்பாளுக்கு மஞ்சள் பாவாடை கொண்டு வருதல் நிகழ்ச்சியை தொடர்ந்து பக்தர்கள் அரண்மனைப் பொங்கல், மாவிளக்கு, காவடி போன்றவைகளை எடுத்து வந்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி விழா இன்று நடைபெறுகிறது. இதற்காக நத்தம் சுற்று வட்டாரப்பகுதிகளிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தந்து குவியத் தொடங்கியுள்ளனர். நேற்று இரவிலிருந்து பக்தர்கள் அம்மன் குளம் சென்று அக்கினிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன்கள் செலுத்தி வருகின்றனர். இதில் பல்வேறு வகையிலான அலகுகளை குத்தியும், அக்கினிச்சட்டி ஏந்தியும் பக்தர்கள் ஊர்வலமாக வருவார்கள். மேலும் மாவிளக்கு எடுத்தல், கரும்பு தொட்டில் கட்டுதல், அரண்மனை பொங்கல் வைத்தல் போன்ற நேர்த்திக்கடன்களையும் பக்தர்கள் நிறைவேற்றும் நிகழ்ச்சிகளும் நடைபெறும்.  

விழாவில் இன்று காலை காந்திநகர் பொதுமக்களால் கழுகுமரம் ஊன்றப்படும். பின்னர் காமராஜ் நகர் பொதுமக்களால் கழுகுமரம் ஏறும் நிகழ்ச்சியை தொடர்ந்து கோயிலின் முன் வளர்க்கப்பட்ட பூக்குழியில் பக்தர்கள் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் முதலாவதாக பூசாரி பூக்குழி இறங்க அவரைத் தொடர்ந்து பக்தர்கள் வரிசையாக இறங்குவர். இந்த நிகழ்ச்சி இரவு வரை தொடர்ந்து நடைபெறும். பின்னர் இன்றிரவு கம்பம் அம்மன் குளத்தில் கொண்டு போய்விடப்படும். நாளை புதன்கிழமை காலை அம்பாள் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து இரவு அம்மன் சர்வ அலங்காரத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து கோயிலை சென்றடையும். இத்துடன் திருவிழா நிறைவு பெறும்.

இதற்கான ஏற்பாடுகளை தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில் நிர்வாக அதிகாரி வாணி மகேஸ்வரி, கோயில் பூசாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். பேரூராட்சி சார்பில் தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமையில் செயல்அலுவலர் சரவணக்குமார் உள்ளிட்ட பணியாளர்கள், ஊழியர்கள், சுகாதாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நத்தம் காவல்துறை சார்பில் 200க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நுண்ணறிவுப் பிரிவு போலீசாரும் பாதுகாப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Pookkuzhi Festival ,Natham Mariamman Temple ,
× RELATED மேலகடையநல்லூர் கருமாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா கோலாகலம்