×

திருச்சி மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் குடிநீர், பாதாள சாக்கடை பணிகள் அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் விரைந்து பணிகளை முடிக்க மேயர் அன்பழகன் உத்தரவு

திருச்சி, மார்ச் 19: திருச்சி மாநகராட்சியில் நடந்து சீர்மிகு நகரத் திட்டப் பணிகள், குடிநீர் திட்டப்பணிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் அம்ரூத் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் மேயர் அன்பழகன் தலைமை வகித்தார். கூட்டத்தில் துணை மேயர் திவ்யா, ஆணையர் முஜிபுர் ரகுமான் மற்றும் நிர்வாக பொறியாளர்கள், அனைத்து கோட்ட உதவி செயற்பொறியாளர்கள், அனைத்து கோட்ட இளநிலைப் பொறியாளர்கள் மற்றும் திட்டப்பணிகளின் ஒப்பந்தக்காரர்கள், திட்டப்பணிகளின் மேலாண் கலந்தாலோசகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சீர்மிகு நகரத்திட்ட குடிநீர் பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளான, தென்னூர், அண்ணாநகர், புத்தூர், சிந்தாமணி, தில்லைநகர், மரக்கடை, மலைக்கோட்டை, உறையூர் ஆகிய பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்களை புனரமைக்கப்பட்டு, 43,114 வீட்டு இணைப்புகள் புதுப்பிக்கப்பட உள்ளது. 4 எண்ணிக்கை மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் மேம்படுத்தப்பட உள்ளதை விரைந்து முடித்து, பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கப்பட வேண்டுமெனவும், போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறின்றி பணிகளை மேற்கொள்ளுமாறு மேயர் அறிவுத்தினார்.

மேலும் குடிநீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் நீர்ப்பணி நிலையங்களை புனரமைத்தல், மோட்டார் பம்புசெட்டுகளை புனரமைத்தல், புதிதாக மின்மோட்டார்கள் பொருத்துதல், நடைபாதை மேம்பாலத்தை புனரமைத்தல், புதிதாக 20 லட்சம் லிட் நீர்தேக்கத் தொட்டி கட்டுதல், மரக்கடை, தில்லைநகர், புத்தூர், உறையூர், விறகுபேட்டை, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் தரைமட்ட நீர்த்தோட்டி மற்றும் மோட்டார் அறை கட்டுதல் மற்றும் 17.459 கி.மீ நீளத்திற்கு குடிநீர் உந்து குழாய் பதித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை விரைந்து முடிக்குமாறும், பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்கு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இதே போல் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை கழிவு நீர் குழாய் மறுசீரமைக்கும் திட்டப் பணிகள், வரையறுக்கப்பட்ட பகுதிகளில்) மொத்தம் 37 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் 3 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மேற்படி 37 வார்டுகளில், 13 வார்டுகளில் முழுவதுமாகவும் மற்றும் 24 வார்டுகளில் பகுதியாகவும் திட்டப்பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் வீட்டிணைப்புகள் 55,155, உந்து நிலையம் 7 எண்ணிக்கைகளும், கழிவுநீர் குழாய் 210 கி.மீ நீளத்திற்கும், பிரதான கழிவு நீர் உந்து குழாய் 7.24 கி.மீ நீளத்திற்கும் அமைக்கப்பட்டு வருவதை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

அம்ரூத் பாதாள சாக்கடை திட்டம் பகுதி-IIல், 25 வார்டு பகுதிகளில் 5 வார்டுகளில் முழுவதுமாகவும், 20 வார்டுகளில் பகுதியாகவும் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதை விரைந்து மேற்கொள்ள வேண்டும். பகுதி- IIIல் 17 வார்டு பகுதிகளில் 4 வார்டுகளில் முழுவதுமாகவும், 13 வார்டுகளில் பகுதியாகவும் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதையும் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Tags : Mayor ,Anpalagan ,Sirmigu ,Trichy Corporation ,
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!