விராலிமலை அருகே சிவன்கோயிலில் வள்ளி- முருகன் திருக்கல்யாண உற்சவம்

விராலிமலை, மார்ச் 19: விராலிமலை அருகே சிவன்கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நரிக்குறவர் இன மக்களை வைத்து முதன் முறையாக வள்ளி- முருகன் திருக்கல்யாணம் நடைபெற்றது. விராலிமலை அருகே உள்ள ராஜாளிப்பட்டி சிவன்கோயிலில் வள்ளி-முருகன் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற பெண் அழைப்பு ஊர்வல நிகழ்ச்சியில் 90க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊர்மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து கலந்து கொண்டனர். விராலிமலை அருகே உள்ளது ராஜாளிப்பட்டி. இந்த ஊரில் உள்ள சிவன் கோயிலில் பங்குனி உத்திரத்தன்று வள்ளி- முருகன் திருமணம் நேற்று நடைபெற்றது.

முருகப்பெருமான் வேடர்போல் சென்று வள்ளியை நேரில் கண்டு அவளின் அழகில் மயங்கியதோடு, காதலிக்க தொடங்கினார். அதன் பின்னர் தன் அண்ணன் விநாயகப்பெருமானின் உதவியுடன் தன்னுடைய திருவிளையாடலை நிகழ்த்தி வள்ளியை திருமணம் செய்து கொண்டார் என்பது வரலாறு. இந்த நிலையில் ராஜாளிப்பட்டி மக்கள் வள்ளி- முருகன் திருமணத்தை அனைவரும் பேசும்படியாக நடத்த வேண்டும் என்று முடிவு செய்து அப்பகுதியில் இருந்த நரிக்குறவர் இன மக்களை ஒன்றிணைத்து அவர்களை ராஜாளிப்பட்டி வரவழைத்து இந்த திருமண விழாவை நடத்தினர். முன்னதாக முருகன் குடும்பத்தார் நரிக்குறவர்கள் இடம் பெண் கேட்பது போலவும், அதற்கு அவர்கள் பெண் தர சம்மதித்ததோடு எங்கள் வழக்கப்படி வள்ளி கழுத்தில் கருகமணி மட்டுமே அணிய வேண்டும் என்று அவர்களிடம் தெரிவிக்கின்றனர்.

இதற்கு முருகன் குடும்பத்தார் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து விழா தொடங்கியது. இதில் ராஜாளிப்பட்டி விநாயகர் கோயிலில் இருந்து பெண் அழைப்பு ஊர்வலம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிவன் கோயில் மண்டபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட வள்ளி-முருகன் திருக்கல்யாண விழா இனிதே நடைபெற்றது. இதில் பங்கேற்றோருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. திருமண விழா முடிந்து செல்லும்போது மொய் எழுதுவது போல் இந்த விழாவிலும் கலந்து கொண்டவர்கள் அவரவர்கள் தகுதிக்கேற்ப போட்டி போட்டு கொண்டு மொய் எழுதி சென்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை வள்ளி- முருகன் திருமண விழா நரிக்குறவர் இன மக்களை வைத்து நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Related Stories: