×

சென்னையில் வாட்ஸ்அப் குழு அமைத்து மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற பட்டதாரி பெண் உட்பட 6 பேர் கைது: ரூ.4.41 லட்சம், 7,125 மாத்திரைகள் பறிமுதல்

சென்னை, மார்ச் 19: கோடம்பாக்கத்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் போதை மாத்திரைகளை அதிகம் பயன்படுத்துவதாக கோடம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், கடந்த 17ம் தேதி கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் மைதானம் அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, பைக்கில் திரிந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் தூக்கம், மனஅழற்சி, மனஇறுக்கம், மனச்சிதைவு மற்றும் வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது. விசாரணையில் அவர்கள், அசோக்நகர் புதூர் 1வது தெருவை சேர்ந்த கிஷோர் (23), கே.ேக.நகர் ராணி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கிஷோர் குமார் (20) என்பதும், இவர்கள் மாணவர்கள் மற்றும் வாலிபர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில், கொத்தவால்சாவடி கந்தப்பாசெட்டி தெருவை சேர்ந்த பூங்குன்றம் (26) மற்றும் அவரது நண்பரான விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் எம்.ஆர்.நகரை சேர்ந்த முத்துபாண்டி (23) அவரது காதலி பூந்தமல்லி கந்தசாமி நகர் அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜலட்சுமி (எ) மித்ரா (22) மற்றும் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கடமலைகுண்டு பகுதியை சேர்ந்த கோகுலன் (24) ஆகியோரிடம் இருந்து இவர்கள் போதை மாத்திரைகளை வாங்கி விற்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து ராஜலட்சுமி உட்பட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் இவர்கள் 6 பேரும் பட்டதாரிகள் என்பதும், தங்களுடன் கல்லூரிகளில் படித்த சக மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள், போதை பழக்கத்திற்கு அடிமையான நபர்களின் செல்போன் எண்களை பெற்று தனியாக வாட்ஸ்அப் குழு தொடங்கி அதன் மூலம் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதில் அதிக லாபம் என்பதால் இதையே 6 பேரும் தொழிலாக கடந்த ஓராண்டாக செய்து வந்துள்ளனர்.

அதன் மூலம் கிடைத்த பணத்தில்  விலை உயர்ந்த 3 பைக்குள் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து  பட்டதாரி பெண் ராஜலட்சுமி, அவரது காதலன் முத்துபாண்டி, பூங்குன்றன், கோகுலன், கிஷோர், கிஷோர் குமார் என 6 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மருத்துவ சிகிச்சைக்கு பயன்படும் மாத்திரைகள், வலி மாத்திரைகள் என 7.125 மத்திரைகள் மற்றும் 2 லேப்டாப், 1 ஐபேட், 9 செல்போன்கள், 4 லட்சத்து 41 ஆயிரத்து 300 ரூபாய் ரொக்கம், 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலி ஆவணம் சமர்ப்பித்து டெல்லியில் கொள்முதல்
கைதான பூங்குன்றன், முத்துபாண்டி,  அவரது காதலி ராஜலட்சுமி ஆகியோர் மெடிக்கல் ஷாப் நடத்துவதாக போலியான ஆவணங்களை  உருவாக்கி, அதை டெல்லியில் உள்ள பிரபல மருந்து நிறுவனத்தில் ஆன்லைன் மூலம்  சமர்ப்பித்து, அதன் மூலம் இந்த வகை மாத்திரைகளை மொத்தமாக வாங்கி உள்ளனர்.  100 மாத்திரைகள் கொண்ட அட்டையை இவர்கள் ரூ.3 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்துள்ளனர். பின்னர்,  அதை ஒரு மாத்திரை ரூ.55 முதல் ரூ.80 வரை போதைக்காக விற்பனை செய்து வந்துள்ளனர்.

Tags : WhatsApp ,Chennai ,
× RELATED தொழில்நுட்ப கோளாறு காரணமாக WhatsApp Chatbot...