×

வனவிலங்குகளின் தாகம் தீர்க்க காமராஜர் சாகரில் இருந்து தண்ணீர் திறப்பு

ஊட்டி, மார்ச் 19: கோடை காலம் துவங்கும் நிலையில் முதுமலையில் வறட்சி நிலவி வருகிறது. வனவிலங்குகளின் தாகம் தீர்க்கும் வகையில் காமராஜர் சாகரில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பனிப்பொழிவு காரணமாக மரங்கள், செடி கொடிகள் காய்ந்து கருகி போய் வனங்கள் பசுமை இழந்து காட்சியளிக்கின்றன. பகல் நேரங்களில் வெயில் கொளுத்துவதால் நீர் நிலைகள் வறண்டுள்ளன. இதனால் வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி இடம்பெயர்ந்து வருகின்றன.

நீலகிரி மாவட்டத்தின் முதுமலை புலிகள் காப்பகத்திலும் கடுமையான வறட்சி நிலவும் நிலையில் வனவிலங்குகளின் தண்ணீர் பற்றாகுறையை போக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். காட்டுத்தீ அபாயம் உள்ளதால் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதனிடையே, ஆண்டுதோறும் கோடை காலத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் ஊட்டி - கூடலூர் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டுபாட்டில் உள்ள காமராஜர் சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

இந்த அணையில் இருந்து திறக்கப்படும் நீரானது கல்லட்டி நீர்வீழ்ச்சி, சீகூர்ஹல்லா, கெதர்ஹல்லா, குண்டாட்டிஹல்லா நீரோடைகள் வழியாக பயணித்து யானை, புலி உள்ளிட்ட விலங்குகள் மட்டுமின்றி சிறு சிறு வன உயிரினங்களின் தாகம் தீர்க்கும். நடப்பு ஆண்டில் கோடை காலம் துவங்கி வறட்சி ஏற்பட்டு வரும் நிலையில் வனத்துறை சார்பில் மின்வாரியத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்த சூழலில் நேற்று முன்தினம் மாலை முதல் காமராஜர் சாகரில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீரானது கல்லட்டி அருவி, பொக்காபுரம், சிங்காராவனப்பகுதி வழியாக முதுமலை புலிகள் காப்பகத்தை அடைந்துள்ளது. இது குறித்து முதுமலை மசினகுடி கோட்ட துணை இயக்குநர் அருண்குமார் கூறுகையில்,``கோடை காலம் என்பதால் தற்போது முதுமலை வெளி மண்டல பகுதிகளில் வனங்கள் பசுமை இழந்து வருகின்றன. வனவிலங்குகளின் தாகம் தீர்க்கும் பொருட்டு காமராஜர் சாகரில் இருந்து தண்ணீர் திறக்க மின்வாாியத்திடம் கேட்கப்பட்டது. இதனை ஏற்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : Kamaraj Sagar ,
× RELATED ஊட்டி - கூடலூர் சாலை காமராஜர் சாகர் அணை...