×

திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் கோயிலில் பால்குட விழா நாளை தேரோட்டம் நடக்கிறது

திருப்புத்தூர், மார்ச் 17: திருப்புத்தூர் அருகே பட்டமங்கலத்தில் அழகு சவுந்தரி அம்மன் கோயிலில் பங்குனித்திருவிழாவை முன்னிட்டு நேற்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அழகு சௌந்தரி அம்மன் கோயில் திருவிழா மார்ச் 10ம் தேதி காப்பு கட்டப்பட்டு துவங்கியது. 2ம் நாள் முதல் 6ம் நாள் வரை தினமும் சுவாமி காலையில் திருவீதி புறப்பாடு நடைபெற்றது. 7ம் நாளான நேற்று காலையில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். பால்குடம்  மதியாத கண்ட விநாயகர் கோயிலில் இருந்து புறப்பட்டு, கடை வீதி, தேரடி வீதி வழியாக அம்மன் கோயில் சென்றது. பின்னர் பக்தர்கள் எடுத்து வந்த பாலால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

8ம் திருநாளான இன்று காலையில் கேடயத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெறும். 9ம் திருநாளான நாளை காலை ஸ்ரீஅழகு சவுந்தரி அம்மன் பெரிய தேரிலும், மதியாத கண்ட விநாயகர் சிறிய தேரிலும் எழுந்தருளுவார்கள். பின்னர் அம்மனுக்கும், விநாயகருக்கும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டு மாலையில் பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெறும். இரவு காமதேனு வாகனத்தில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெறும். 10 நாளான மார்ச் 19ல் காலை 10 மணியளவில் தீர்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சி, இரவு சுவாமி பூப்பல்லாக்கில் புறப்பாடு நடைபெறும். 11ம் நாளான மார்ச் 20ல் காலையில் சுவாமி  ரிஷப வாகனத்தில் புறப்பாடு நடைபெறும். 11 மணிக்கு மேல் காப்பு களைதல் நிகழ்ச்சி நடைபெறும்.

Tags : Pattamangalam temple ,Tiruputhur ,
× RELATED மாடு முட்டி முதியவர் பலி