×

பழநி அரசு மருத்துவமனை ₹60 கோடியில் நவீனமயமாகும் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ தகவல்

பழநி, மார்ச் 17: பழநி அருகே பாலசமுத்திரத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. சுகாதார பணிகள் துணை இயக்குநர் யசோதாமணி தலைமை வகித்தார். பழநி கோட்டாட்சியர் சிவக்குமார், தாசில்தார் சசி முன்னிலை வகித்தனர். முகாமினை துவக்கி வைத்து பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் பேசியதாவது, ‘தமிழக முதல்வரால் உயிர்ப்பிக்கப்பட்டுள்ள தற்போது இத்திட்டம் ஆண்டுதோறும் 1155 இடங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இம்முகாமில் 15 வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சரால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 4 ஆம்புலன்சுகளில் 1 பழநி அருகே பாப்பம்பட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

பழநி மக்களின் நீண்ட கால கோரிக்கையை சட்டமன்றத்தில் எடுத்துரைத்ததன் பயனாக பழநி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.60 கோடியில் பழநி அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்பட உள்ளது. இதற்காக முதற்கட்டமாக ரூ. 9.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பழநி வட்டாரத்தில் 59 ஆயிரத்து 318 பேர் இதுவரை மருத்துவ முகாம் திட்டத்தால் பயனடைந்துள்ளனர். பழநி வட்டாரத்தில் 98.01 % பேருக்கு முதற்கட்ட கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசிகளை அதிகப்படுத்தி மக்களின் உயிர் பயத்தை போக்கியவர் தமிழக முதல்வர் ஸ்டாலின். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் பழநி நகராட்சி தலைவர் உமாமகேஷ்வரி, திமுக ஒன்றிய செயலாளர் சௌந்திரபாண்டியன், மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் சோ.காளிமுத்து, பாலசமுத்திரம் பேரூராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி, துணை தலைவர் விஜய்கிருஷ்ணன், திமுக பேருர் செயலாளர் சுப்புராம், முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் பாலசுப்பிரமணி, துரைராஜா, நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் எஸ்கேஆர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ராஜேஸ்வரி தலைமையிலான மருத்துவக்குழுவினர் 1000க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை, சிகிச்சை அளித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அப்துல் வகாப் நன்றி கூறினார்.

Tags : Palani Government Hospital ,Senthilkumar ,
× RELATED டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் பாலக்கோடு வாலிபர் பங்கேற்பு