×

போடி வஞ்சி ஓடையில் 3வது பாலம் விரிவாக்கம் தீவிரம்

போடி, மார்ச் 15: போடி 32வது வார்டு பகுதி சுப்புராஜ் நகரில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வஞ்சி ஓடை மெயின் சாலையில் உள்ளது. போடிமெட்டு, பரமசிவன் கோயில் மலை அடிவார பகுதிகளிலிருந்து வரும் பெரும் காட்டாறு வெள்ளம் இந்த ஓடையின் வழியாக கடந்து ஊருக்குள் புகாமல் ரெட்டை வாய்க்கால் வழியாக கொட்டகுடி ஆற்றில் கலந்து வருகிறது. இந்த ஓடையின் இருபுறங்களிலும் மண் தடுப்பு கரைகள் சேதமாகி காட்டாறு வெள்ளம் வரும் போது உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்து அபாயம் இருந்தது.

இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மண் தடுப்பு கரைகளில் 15 அடி உயரத்திற்கு கான்கிரீட் தடுப்புகள் அமைத்து பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓடை தூர்வாரப் பட்டு காட்டாறு வெள்ளம் எவ்வளவு வந்தாலும் ஊருக்குள் புகுவதை தடுக்கும் விதமாக பலப்படுத்தப்பட்டுள்ளது.இந்த ஓடையின் மேல் சுப்புராஜ் நகர், புது காலனி, பரமசிவன் கோயில், ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்வதற்கும் உள்ள 4 குறுகிய பாலங்களும் சேதம் அடைந்து இருந்தது.

இதில் ஏற்கனவே சுப்புராஜ் நகர், ரயில்வே ஸ்டேஷன் 2 பாலங்கள் இடித்து உயரமான விரிவான பாலங்களாக கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்திற்கும் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது போடி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வத்தின் அலுவலகம் செல்லும் வஞ்சி ஓடை குறுகிய பாலம் தற்போது விரிவுபடுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதேபோல் கடந்த 1999ம் ஆண்டு கட்டப்பட்ட வஞ்சி ஓடையின் முதல் பாலத்தின் இருபுற தடுப்புகளும் சேதமடைந்துள்ளது. எனவே இப்பாலத்தில் உள்ள தடுப்புகளையும் பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags : Bodi Vanchi ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது