×

இன்று உலக நுகர்வோர் தினம் தரமான பொருட்கள் கிடைப்பதற்கு நுகர்வோர் போராடுவது அவசியம்

மதுரை, மார்ச் 15: நுகர்வோர் நல ஆர்வலர் ஜெயலெட்சுமி கூறியதாவது: இன்று உலக நுகர்வோர் தினம். நுகர்வோரின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15ம் தேதி, உலக நுகர்வோர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. நுகர்வோருக்கு அடிப்படைத் தேவைகளில் திருப்தி அடையும் உரிமை, பாதுகாப்பு உரிமை, பொருட்கள் பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ளும் உரிமை, வாங்குவதை தேர்ந்தெடுக்கும் உரிமை, உத்தரவாதம் பெறும் உரிமை, நிவர்த்தி பெறும் உரிமை, நுகர்வோர் உரிமை, கல்வி பற்றித் தெரிந்து கொள்ளும் உரிமை, ஆரோக்கியமான சுற்றுச்சூழல் பெறும் உரிமை போன்ற உரிமைகள் உள்ளன. ஒரு நாடு செழிப்பாக இயங்க வேண்டுமெனில் நேர்மையான வணிகம் மிக முக்கியமும் அவசியமுமானது.

வாடிக்கையாளர்களே முதன்மையானவர், நுகவோரை புறக்கணித்தாலோ, ஏமாற்றினாலோ வியாபாரம் பாதித்து விடும் என காந்தி கூறி உள்ளார். ரசீதுடன் நுகர்வோர் வாங்கிய பொருட்களில் சேவைகளில் குறைபாடுகள் இருந்தாலோ, சட்டத்திற்கு புறம்பாக அல்லது அறிவிக்கப்பட்ட அல்லது குறிப்பிட்ட விலைக்கு அதிகமாக விலை பெற்றிருந்தாலோ நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் அளித்து இழப்பீட்டை பெறலாம்.  தொலைபேசி காப்பீடுகள், மருத்துவம், அஞ்சலகம், போக்குவரத்து சேவைகள். உணவு விடுதி சேவைகள் உள்ளிட்ட பணம் கொடுத்து பெறும் அனைத்தும் சேவைகளாக அடங்கும். ரேஷன் கடையில் பணம் கொடுத்து வாங்கும் பொருட்களில் குறைபாடு இருந்தால், நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம். கோரும் நஷ்ட ஈட்டுத்தொகை ரூ.20 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திலும், ரூ.1 கோடிக்கு குறைவாக இருந்தால் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் ரூ.1 கோடிக்கு மேற்பட்டு இருந்தால் தேசிய நுகர்வோர் குறைத்தீர் ஆணையத்திடமும் நேரிடையாக புகார் செய்யலாம்.

முடிந்தவரை விரைவாக புகார் செய்ய வேண்டும். உங்கள் புகாரின் அடிப்படையில் எதிர்தரப்பு செயல்படுவதற்கு நியாயமான கால அவகாசம் (சுமார் 15 நாட்கள்) கொடுக்க வேண்டும். எல்லா ஒரிஜினல் ஆவணங்களையும் நீங்களே வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றை நீதிமன்றம் சொன்னாலொழிய வேறு எவரிடமும் கொடுக்காதீர்கள்.  தேவைப்படும்போதெல்லாம் ஜெராக்ஸ் எடுத்தே பயன்படுத்துங்கள். நுகர்வோர் எதிர்த்து போராடினால்தான், தரமான பொருட்கள் சந்தையில் கிடைக்கும். நுகர்வோர் உரிமை குறித்த விழிப்புணர்வை பரவலாக ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : World Consumer Day ,
× RELATED நுகர்வோர் உரிமைகள் இயக்கம் சார்பில்...