×

தேர்த் திருவிழாவில் மோதல் பள்ளி மாணவன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் தேர்த்திருவிழாவில், காலை மிதித்ததாக கூறி 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. இதைதொடர்ந்து, தினமும் பல்வேறு அலங்காரத்தில் ஏகம்பரநாதர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு வெள்ளித் தேரோட்டம் நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது வெள்ளித் தேர் உற்சவத்தை பார்த்துவிட்டு ஒரு சிறுவன் உள்பட 3 பேர் காமாட்சி அம்மன் சன்னதி தெரு வழியாக வீட்டுக்கு செல்ல முயன்றனர். அப்போது, அங்கிருந்த ஒருவரது காலை மிதித்து விட்டனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் 3 பேரும் வருத்தம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். அவர்கள், நரசிங்கராயர் தெருவில் சென்றபோது, திடீரென 15 பேர் கொண்ட கும்பல், அவர்களை மறித்து, 3 பேரையும் சுற்றி வளைத்து சராமரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர்கள் அலறி துடித்தனர்.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். உடனே மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து படுகாயமடைந்த 3 பேரையும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நரேஷ், கவியரசு ஆகியோர் சென்னைக்கும், ராகுல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

புகாரின்படி சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, படுகாயமடைந்தவர்கள் குறித்து விசாரித்தனர். அதில் காஞ்சிபுரம் திருப்பாக்கூடல் தெருவை சேர்ந்த இன்ஜினியர் நரேஷ் (22), நகரசிங்கராயர் தெருவை சேர்ந்த இன்ஜினியர் கவியரசு (23), ஓரிக்கையை சேர்ந்த பிளஸ் 2 மாணவன் ராகுல் என தெரிந்தது. அதில் கவியரசு, சதுரங்க விளையாட்டில் தேசிய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து போலீசார், தப்பி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கோயில் திருவிழா நேரத்தில் 3 பேர் வெட்டப்பட்ட சம்பவம், காஞ்சிபுரத்தில் பரபப்பை ஏற்படுத்தியது.

Tags : Earth Festival ,
× RELATED தேர்த் திருவிழாவில் மோதல் பள்ளி மாணவன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு