×

சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் பண்ணாரி அம்மன் வீதி உலா தொடங்கியது

சத்தியமங்கலம், மார்ச் 10: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா விமரிசையாக கொண்டாடப்படாத நிலையில் இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் காலை பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பண்ணாரி அம்மன் திருவீதி உலா சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களான சிக்கரசம்பாளையம் கிராமத்தில் இருந்து நேற்று தொடங்கியது.  கிராமங்களில் உள்ள அனைத்து வீதிகளிலும் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். பவானிசாகர், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரங்களில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வரும் திங்கள்கிழமை இரவு வரை வீதி உலா நடைபெறும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தீயணைப்பு வாகனங்களில் 40 வீரர்கள் பாதுகாப்பு: ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறியதாவது: பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழாவையொட்டி ஈரோடு தலைமை அலுவலகத்தில் இருந்து 2 தீயணைப்பு வாகனம், ஒரு பம்ப் வாகனமும் வரும் 19ம் தேதி முதல் நிலை நிறுத்தப்பட்டு, 24 மணி நேரமும் 30 தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

குண்டம் விழா அன்று கூடுதலாக 10 பேர் என மொத்தம் 40 வீரர்கள் பாதுகாப்பு பணி மேற்கொள்வர். இந்த பணி விழா நிறைவு பெறும் வரை அதாவது 28ம் தேதி வரை தீயணைப்பு வாகனங்களும், வீரர்களும் பண்ணாரியில் தொடர்ந்து பணியில் இருப்பர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Pannari ,Amman Veedi Ula ,Satyamangalam ,
× RELATED கேரளாவில் பதுங்கிய கள்ளச்சாராய வியாபாரி கைது