×

ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம்: திமுக கூட்டணி கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் ஆதரவு

சென்னை: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் நடக்கும் போராட்டத்துக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் பஞ்சாப் உள்ளிட்ட பல மாநில விவசாயிகள் 300 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் ஒன்றிய அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டம் பரவியது. தமிழகத்தில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.  இந்த நிலையில் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் செப்டம்பர் 27ம் தேதி பாரத் பந்த் நடத்துவதற்கு டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கூட்டமைப்பான சம்யுக்த் கிஷான் மோர்ச்சா அழைப்பு விடுத்தது. அதன்படி இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்துக்கு நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் என 100க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.  தமிழகத்திலும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு பெருகி உள்ளது. திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், பாமக, தேமுதிக, மநீம, அமமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதுதவிர பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் வர்த்தக அமைப்புகள் ஆதரவு தெரிவித்து இன்று நடக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளன. மேலும், பெரும்பாலான மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட உள்ளன. நாகை மாவட்டத்தில் 20 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடக்கிறது. மாவட்டம் முழுவதும் 15,000 கடைகள் அடைக்கப்பட உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடக்கிறது. ஒரு இடத்தில் ரயில் மறியல் நடக்கிறது. மாவட்டம் முழுவதும் 20,000 கடைகள் அடைக்கப்படுகிறது.  திருவாரூர் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடக்கிறது. நீடாமங்கலம், சிங்களாஞ்சேரி, திருத்துறைப்பூண்டி ஆகிய 3 இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் 60 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடக்கிறது. தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், பூதலூரில் ரயில் மறியல் போராட்டம் நடக்கிறது. 35,000 கடைகள் அடைக்கப்படுகிறது.  கரூர் மாவட்டத்தில் 7 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடக்கிறது.  மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் கடைகள் அடைக்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 இடங்களில் சாலை மறியல் போராட்டம், ஒரு இடத்தில் ரயில் மறியல் போராட்டம் நடக்கிறது. 3,000 கடைகள் அடைக்கப்படவுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் சாலை மறியல் நடக்கிறது. மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் 6 இடங்களில் சாலை மறியல் நடக்கிறது. மாவட்டம் முழுவதும் 1,200 கடைகள் அடைக்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் 17 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடக்கிறது. திருவெறும்பூர், அந்தநல்லூர் பகுதியில் ரயில் மறியல் போராட்டம் நடக்கிறது. டெல்டா மாவட்டங்களில் மட்டும் சுமார் 99 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட உள்ளன. இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட தலைவர் மாசிலாமணி கூறுகையில், இந்திய விவசாயத்தையும், விவசாயிகளையும் பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் வசம் ஒப்படைக்கும் நோக்கில் ஒன்றிய அரசு, 3 வேளாண் சட்ட திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இதை கண்டித்து இந்திய விவசாயிகள் முன்னணி மற்றும் அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நாளை நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடக்கிறது  என்றார். புதுச்சேரி: புதுவை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் பாரதி கண்ணன் கூறுகையில், பந்த் போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர், தொழிற்சங்கத்தினர் ஆதரவு கேட்டுள்ளனர். இதேபோல், தமிழகத்திலும் ஆதரவு கேட்டனர். இதனால் பேருந்துகளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயக்க மாட்டோம். பிறகு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்தார். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பந்த்தையொட்டி இன்று காலை 9.30 மணியளவில் 12 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது….

The post ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம்: திமுக கூட்டணி கட்சிகள், விவசாய சங்கங்கள், வர்த்தகர்கள் ஆதரவு appeared first on Dinakaran.

Tags : Nationwide ,Union government ,DMK alliance ,Chennai ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணிக்கை நாள் அன்று...