கோவில்பட்டி நகராட்சி தலைவராக கருணாநிதி துணைத்தலைவராக ஆர்.எஸ்.ரமேஷ் பதவியேற்பு

கோவில்பட்டி, மார்ச் 5: கோவில்பட்டி நகராட்சி தலைவராக நகர திமுக செயலாளர் கருணாநிதியும், துணைத்தலைவராக வடக்கு மாவட்ட மதிமுக செயலாளர் ஆர்.எஸ்.ரமேசும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். கோவில்பட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் திமுக 19, சிபிஎம் 5, அதிமுக 4, மதிமுக -2, சிபிஐ -1, அமமுக -1, பாஜ-1, சுயேட்சை -3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் கடந்த 2ம் தேதி கவுன்சிலர்களாக பதவியேற்று கொண்டனர். நேற்று காலை கோவில்பட்டி நகராட்சி கூட்டரங்கில் நகராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்தது. இதில் 33 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

 கோவில்பட்டி நகராட்சி தேர்தலில் 16வது வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற நகர திமுக செயலாளர் கருணாநிதி, நகராட்சி கமிஷனர் ராஜாராமிடம் நகராட்சி தலைவர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து கருணாநிதி, கோவில்பட்டி நகராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக நகராட்சி கமிஷனர் ராஜாராம் அறிவித்தார்.

 பிற்பகலில் நகராட்சி கூட்டரங்கில் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. 11வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் துணைத்தலைவர் பதவிக்கு, கமிஷனர் ராஜாராமிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால் துணைத்தலைவராக ஆர்.எஸ்.ரமேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக நகராட்சி கமிஷனர் ராஜாராம் அறிவித்தார். மறைமுக தேர்தலை முன்னிட்டு கோவில்பட்டி நகராட்சி வளாகத்தில் டிஎஸ்பி உதயசூரியன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்தல் நடந்த நகராட்சி கூட்டரங்கிற்குள் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகளை தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.

முன்னதாக நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் முருகேசன், மாவட்ட துணை செயலாளர் ஏஞ்சலா, பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பொறியாளரணி துணை அமைப்பாளர் ரமேஷ், வழக்கறிஞரணி அழகர்சாமி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர், துணை அமைப்பாளர்கள் சந்தானம், கடம்பூர் முருகன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ராஜகுரு, துணை அமைப்பாளர்கள் சேதுரத்தினம், பரமசிவம், தவமணி, அவைத்தலைவர் முனியசாமி, மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் செல்லப்பா, நகர இளைஞரணி அமைப்பாளர் மகேந்திரன், நகர துணை செயலாளர் அன்பழகன், மாவட்ட பிரதிநிதிகள் மாரிச்சாமி, ரவீந்திரன், புஷ்பராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட கருணாநிதி, துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஆர்.எஸ்.ரமேஷ் ஆகியோர் கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலை, காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி சிலை, காமராஜர் சிலை உள்ளிட்ட தலைவர்களின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுக ஆப்சென்ட் கோவில்பட்டி நகராட்சியில் 36 வார்டுகளில்

24வது வார்டில் செண்பகமூர்த்தி, 26வது வார்டில் வள்ளியம்மாள், 32வது வார்டில் கவியரசன் ஆகிய 3 பேர் அதிமுக சார்பில் கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்டனர். நகராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்த நிலையில் அதிமுக கவுன்சிலர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

Related Stories: