திருச்செந்தூர் நகராட்சியில் போட்டியின்றி தலைவராக சிவஆனந்தி, துணைத்தலைவராக ரமேஷ் தேர்வு

திருச்செந்தூர், மார்ச் 5: திருச்செந்தூர் நகராட்சி தலைவராக சிவஆனந்தியும், துணை தலைவராக ஒன்றிய திமுக செயலாளர் ஏபி ரமேசும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். திருச்செந்தூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 21 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும், அதிமுக 2 வார்டுகளிலும், சுயேச்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். திருச்செந்தூர் நகராட்சியில் திமுக அறுதிப் பெரும்பான்மைக்கும் அதிகமாக வெற்றி பெற்றுள்ள நிலையில் நகராட்சி தலைவர் பதவிக்கு சிவ ஆனந்தியும், துணைதலைவர் பதவிக்கு திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ஏபி ரமேசும் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

நேற்று காலை 9.30 மணிக்கு தேர்தல் நடந்தது. தலைவர் பதவிக்கு சிவ ஆனந்தியை தவிர வேறு யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக நகராட்சி ஆணையர் வேலவன் முன்னிலையில் கோப்புகள் வழங்கப்பட்டு, அதில் கையெழுத்திட்டு சிவஆனந்தி பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து நகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கும், பின்னர் நகராட்சிக்கு எதிரே உள்ள காமராஜர் சிலைக்கும், அமலிநகரில் உள்ள அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பிற்பகல் 2.30 மணிக்கு நடந்த துணை தலைவர் தேர்தலில் ஒன்றிய திமுக செயலாளர் ஏபி ரமேஷ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து நகர்மன்றத்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட சிவாஆனந்திக்கும், துணை தலைவர் ஒன்றிய திமுக செயலாளர் ஏபி ரமேஷ் ஆகியோருக்கு அனைத்து நகராட்சி கவுன்சிலர்களும், திமுக முக்கிய பிரமுகர்களும் கட்சி தொண்டர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: