×

நெல்லை மேயராக பி.எம்.சரவணன் துணைமேயராக கே.ஆர்.ராஜூ போட்டியின்றி தேர்வு அப்துல்வஹாப் எம்எல்ஏ வாழ்த்து

நெல்லை, மார்ச் 5: நெல்லை  மாநகராட்சி மேயராக நெல்லை மத்திய மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பி.எம்.சரவணனும்,  துணைமேயராக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.ராஜூவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். நெல்லை மாநகராட்சியில் நெல்லை,  பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம் என 4 மண்டலங்களில் 55 வார்டுகள் உள்ளன.  இந்த 55 வார்டுகளில் திமுக 44 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும்,  மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் தலா 1 இடத்திலும் என  50 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது.

அதிமுக 4  இடங்களிலும், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இந்த 55  உறுப்பினர்களும் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு நெல்லை மாநகராட்சி ராஜாஜி மைய கூட்டரங்கில் நெல்லை  மேயர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில் 16வது வார்டு உறுப்பினர்  பி.எம்.சரவணன் மாநகராட்சி கமிஷனர் விஷ்ணுசந்திரனிடம் மேயர் பதவிக்கு  வேட்புமனுத்தாக்கல் செய்தார். அவரது வேட்புமனுவை 11வது வார்டு உறுப்பினர்  கந்தன் முன்மொழிய, 40வது வார்டு உறுப்பினர் வில்சன் மணித்துரை  வழிமொழிந்தார்.

அவரை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.  இதையடுத்து பி.எம்.சரவணன் நெல்லை மாநகராட்சி மேயராக போட்டியின்றி தேர்வு  செய்யப்பட்டதாக மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் அறிவித்தார். இவர்  நெல்லை மாநகராட்சியின் 6வது மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பிற்பகலில்  மாநகராட்சி கூட்டரங்கில் துணை மேயர் பதவிக்கான தேர்தல் நடந்தது. திமுக  சார்பில் துணை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 1வது  வார்டு உறுப்பினர் கேஆர்.ராஜூ கமிஷனர்  விஷ்ணுசந்திரனிடம் வேட்புமனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும்  மனுத்தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி  தேர்வு செய்யப்பட்டதாக மாநகராட்சி கமிஷனர் அறிவித்தார்.

மேயராக  தேர்வு செய்யப்பட்ட பி.எம்.சரவணன், துணை மேயராக தேர்வு செய்யப்பட்ட  கே.ஆர்.ராஜூ ஆகிய இருவரும் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளரும்,  பாளையங்கோட்டை எம்எல்ஏவுமான அப்துல்வகாப்பிடம் வாழ்த்து பெற்றனர். மேயர்,  துணை மேயர் தேர்தலை முன்னிட்டு நெல்லை மாநகராட்சி வளாகத்தில் பலத்த போலீஸ்  பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்தல் நடந்த கூட்ட அரங்கிற்குள் வெற்றி  பெற்ற கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் தவிர வேறு யாரையும்  அனுமதிக்கவில்லை.

செல்போன் அனுமதியில்லை
மேயர்,  துணை மேயர் தேர்தலை முன்னிட்டு கூட்ட அரங்கிற்குள் கவுன்சிலர்கள் யாரும்  செல்போன் கொண்டு செல்ல அனுமதி அளிக்கவில்லை. இதனால் கவுன்சிலர்கள் அனைவரும்  தங்களுடன் வந்திருந்த குடும்பத்தினர், உறவினர்களிடம் செல்போனை ஒப்படைத்து  விட்டு தேர்தலில் பங்கேற்றனர்.

அதிமுக ஆப்சென்ட் நெல்லை  மாநகராட்சியில் 55 வார்டுகளில்
2வது வார்டில் முத்துலட்சுமி, 28வது  வார்டில் சந்திரசேகர், 30வது வார்டில் ஜெகநாதன், 31வது வார்டில் அமுதா ஆகிய  4 பேர் அதிமுக சார்பில் கவுன்சிலர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மேயர்,  துணைமேயர் தேர்தல் இன்று நடந்த நிலையில் அதிமுக கவுன்சிலர்கள் யாரும் இந்த  தேர்தலில் பங்கேற்கவில்லை.

Tags : Abdul Wahab ,MLA ,KR ,Raju ,PM ,Saravanan ,Deputy Mayor ,Nellai ,
× RELATED அப்துல்வஹாப் எம்எல்ஏ உடன் பிரசாரம்...