×

பள்ளிபாளையம் நகராட்சியில் போட்டி திமுக வேட்பாளர் செல்வராஜ் தலைவரானார்

பள்ளிபாளையம், மார்ச் 5: பள்ளிபாளையம் நகராட்சி தலைவராக செல்வராஜூம், துணைத்தலைவர் பதவியை பாலமுருகனும் தேர்வு செய்யப்பட்டனர். பள்ளிபாளையம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 13 வார்டுகளை திமுக கைப்பற்றியது. 8 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றது. தலைவர் தேர்தலுக்கு திமுக வேட்பாளராக அமுதா அங்கப்பன் அறிவிக்கப்பட்டார்.

தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் நேற்று 21 வார்டு கவுன்சிலர்களும் பங்கேற்றனர். திமுக வேட்பாளர் அமுதா தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து 21வது வார்டு திமுக கவுன்சிலர் செல்வராஜ், போட்டி மனு தாக்கல் செய்தார். வாக்குகள் எண்ணிக்கை முடிவில், செல்வராஜ் 12 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அமுதா 9 வாக்குகள் பெற்றார். இதையடுத்து மதியம் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.

இதில் திமுக உறுப்பினர்கள் 13 பேர் மட்டுமே வந்திருந்தனர். அதிமுக கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. துணைத்தலைவர் பதவிக்கு 3வது வார்டு திமுக கவுன்சிலர் பாலமுருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் மனு செய்யவில்லை. இதையடுத்து போட்டியின்றி பாலமுருகன் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

Tags : Pallipalayam ,DMK ,Selvaraj ,
× RELATED நீர்மோர் பந்தல் திறப்பு