நகர்மன்ற தலைவராக பரிதா நவாப் பதவியேற்பு

கிருஷ்ணகிரி, மார்ச் 5: கிருஷ்ணகிரி நகர்மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த பரிதா நவாப் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக நகர்மன்ற தலைவராக பொறுப்பேற்றார். துணை தலைவராக சாவித்திரி கடலரசுமூர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார். கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக 22 வார்டுகளிலும், அதிமுக 5 வார்டுகளிலும், காங்கிரஸ் மற்றும் பாஜ தலா ஒரு வார்டிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். சுயேட்சை வேட்பாளர்களில் 3 பேர் திமுகவிலும், ஒருவர் அதிமுகவிலும் இணைந்தனர்.

இந்நிலையில் நேற்று, தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல், நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது. காலை 10 மணிக்கு தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில், திமுக சார்பில் 1வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நகர்மன்ற முன்னாள் தலைவரும், கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்பாளருமான பரிதாநவாப், அதிமுக சார்பில் 24வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நகர்மன்ற முன்னாள் தலைவர் தங்கமுத்துவின் மனைவி காயத்ரி தங்கமுத்து ஆகியோர் போட்டியிட்டனர்.

தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான முருகேசன், கிருஷ்ணகிரி ஆர்டிஓ சத்தீஸ்குமார் ஆகியோர் முன்னிலையில் வாக்கு பதிவு நடந்தது. பின்னர், வாக்கு எண்ணிக்கை அனைத்து வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் நடந்தது. இதில், திமுகவை சேர்ந்த பரிதா நவாப் 26 வாக்குகளும், அதிமுகவை சேர்ந்த காயத்ரி தங்கமுத்து 7 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து, பரிதா நவாப் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்து, அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர், பரிதா நவாப் நகர்மன்ற தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, மதியம் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடந்தது. இதில், திமுக சார்பில், 13வது வார்டில் வெற்றி பெற்ற கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, அதிமுக சார்பில் 12வது வார்டில் வெற்றி பெற்ற எழிலரசி சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேசன் முன்னிலையில் வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட சாவித்திரி கடலரசுமூர்த்தி 26 வாக்குகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட எழிலரசி சரவணன் 7 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து துணைத் தலைவராக சாவித்திரி கடலரசுமூர்த்தி வெற்றி பெற்றதாக அறிவித்து, அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Related Stories: