×

‘நம்மை காக்கும் 48’ திட்டத்தில் மதுரை ஜி.ஹெச் முதலிடம்

மதுரை, மார்ச் 5: மதுரை அரசு மருத்துவமனையில் சுமார் 100 படுக்கை வசதிகளுடன் அதிநவீன உயிர்காக்கும் அவசர சிகிச்சை உபகரணங்களுடன் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு (டி.எ.இ.ஐ - தாய் திட்டம்) என்ற சிறப்பு பிரிவு இயங்கி வருகிறது. இதுகுறித்து அவசர சிகிச்சை துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் கே.பி. சரவணகுமார் கூறும்போது, ‘‘நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலான செயல்பாட்டிகளின் அடிப்படையில் தமிழகத்திலேயே மதுரை அரசு மருத்துவமனை தான் முதல் இடத்தில் உள்ளது. சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த பிரிவுக்கு மருத்துவமனையின் டீன் ரத்தினவேல் பல்வேறு வகைகளில் உதவி செய்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக அவசர சிகிச்சை பிரிவு என்று கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தனியாக துறையை ஏற்படுத்தி உள்ளார். இங்கு அவசர சிகிச்சைக்கென்று பிரத்தியேக துறை இல்லாததால் அந்தந்த துறையைச் சேர்ந்த மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே மதுரை மருத்துவக் கல்லூரியில் முதுகலை அவசர சிகிச்சைக்கான ஐந்து இடங்களை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். அவை வழங்கப்பட்டால் அவசர சிகிச்சைக்கான பிரத்யேக பட்டப்படிப்பு இங்கு துவங்கப்பட்டு தற்போது செயல்பட்டு வரும் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் அவசர சிகிச்சைக்கான மருத்துவர்கள் பிரத்யேகமாக நியமிக்கப்படுவர். அதுமட்டுமின்றி ஒப்பந்த அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி தரப்பட்டால் இன்னும் சிறப்பாக எங்களால் பணி செய்ய முடியும்,” என்றார்.

Tags : Madurai ,GH ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...