×

பெரும்பான்மையுடன் மாமன்றம் அமைந்துள்ளதால் இதுவரை அடையாத முன்னேற்றத்தை மதுரை மாநகராட்சி பெறும் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல்தியாகராஜன் நம்பிக்கை

மதுரை, மார்ச் 5: பெரும்பான்மையுடன் மாமன்றம் அமைந்துள்ளதால் இது வரை அடையாத முன்னேற்றத்தை மதுரை மாநகராட்சி பெறும் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல்தியாகராஜன் நம்பிக்கை தெரிவித்தார். மதுரை மாநகராட்சியில் நேற்று புதிய மேயர் இந்திராணி பொன்வசந்த் பதவி ஏற்புக்கு பிறகு நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்திய 9 மாத ஆட்சியில் தமிழ்நாடு நிதி நிலை, மேலாண்மை அரசாங்கம் ஆகியவற்றில் சீர்திருத்தத்தை கொண்டு வந்த அடிப்படையில் மக்கள் வரலாறு காணாத வெற்றியை திமுகவிற்கு தந்துள்ளனர்.

நீதிக்கட்சி காலத்தில் இருந்து அடிப்படை தத்துவம், கொள்கை, சுயமரியாதை, சமூக நீதி, சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி இந்த தத்துவத்தில் நூறு ஆண்டுகளாக தமிழ்நாடு இருப்பதால் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. முதலமைச்சர் கூற்றுப்படி இது திராவிட மாடல் அரசு. சுயாட்சி என்பது வெறும் மாநிலத்தின் உரிமை மட்டும் அல்ல மாமன்றங்கள் துவங்கி எல்லாவற்றிலும் மக்களே அவர்களை மேலாண்மை செய்து கொள்ள வேண்டும். இது தான் ஜனநாயகம். மக்களின் அடிப்படை தேவை குடிநீர், பாதாள சாக்கடை, குப்பை அகற்றல், சாலைகள், தெரு விளக்குகள் இவை எல்லாம் உள்ளாட்சியின் உரிமை, கடமை. அது சிறந்த அளவில் செயல்பட்டால் தான் மக்களின் வாழ்க்கை தரம் உயரும்.

கடந்த ஐந்தாண்டு காலமாக தேர்தலை நடத்திடாமல் ஜனநாயக படுகொலை நடந்தது. அதன் பிறகும் வார்டு மறுவரையரை குளறுபடியாக செய்யப்பட்டது. இன்றைக்கு மதுரை மாநகர வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரும்பான்மையுன் கூடிய மாமன்றம் அமைந்துள்ளது. சிறந்த ஒரு மேயரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் திராவிட கொள்கைகளுக்கு விசுவாசம் வைத்திருப்பவர். இதனால் இந்த ஐந்தாண்டு உள்ளாட்சி காலத்தில் இதுவரைக்கும் அடையாத வளர்ச்சியும் அடையாத முன்னேற்றத்தையும் மாநகராட்சி பெறுவதுடன் உட்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, மாஸ்டர் பிளான், சீர்திருத்தம் என அனைத்தையும் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இன்றைக்கு மதுரை திமுகவில் தெளிவான பிம்பம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Finance Minister ,PDR ,Palaniveldiyagarajan ,Madurai Corporation ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...