பல்லடம் நகராட்சி முதல் பெண் தலைவியாக கவிதாமணி பொறுப்பேற்பு

பல்லடம், மார்ச் 5:  பல்லடம் நகராட்சியின் முதல் பெண் தலைவியாக தி.மு.க.வை சேர்ந்த கவிதாமணி போட்டியின்றி தேர்வு செய்யபட்டார். பல்லடம் நகராட்சியானது கடந்த 1964 முதல் பேரூராட்சியாக இருந்து வந்த நிலையில் 2004-ம் ஆண்டு 3-ம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப் பட்டது. பின்பு 2010-ல் முதல் நிலை நகராட்சியானது. இங்கு மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. 2001-ல் அ.தி.மு.க., 2006-ல் தி.மு.க. 2011-ல் தே.மு.தி.க., என தலா ஒருமுறை நகராட்சியை கைப்பற்றியுள்ளன.

இந்த முறை இட ஒதுக்கீடு அடிப்படையில் பல்லடம் நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெற்ற நகராட்சி தேர்தலில், தி.மு.க., 12 வார்டுகளையும், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்-1, ம.தி.மு.க.-1வார்டையும் கைப்பற்றின. பா.ஜ.க.-2, அ.தி.மு.க.-1, மற்றும் சுயேச்சை 1 வார்டிலும் வெற்றி பெற்றனர். இதனால் நகராட்சி தி.மு.க. வசமானது.

இந்த நிலையில், தி.மு.க. தலைமையால் பல்லடம் நகராட்சி தலைவியாக 5 வது வார்டில் வெற்றி பெற்ற கவிதாமணி (37) அறிவிக்கப்பட்டார். இப்பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. யாரும் எதிர்த்து போட்டியிடாததால் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டதையடுத்து பல்லடம் நகராட்சியின் முதல் பெண் தலைவியாக கவிதாமணி நேற்று பதவியேற்றார். அவருக்கு நகராட்சி ஆணையாளர் விநாயகம், நகராட்சி பொறியாளர் ஜான்பிரபு, சுகாதார ஆய்வாளர் சங்கர், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், நகரமைப்பு அலுவலர் வெங்கடேஷ், மேலாளர் ஜெரோ மற்றும் பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் கணபதிபாளையம் சோமசுந்தரம், நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மதிமுக நகர செயலாளர் பாலசுப்பிரமணியம், கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர்கள் பரமசிவம், சாகுல்அமீது உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். பல்லடம் நகராட்சி துணை தலைவியாக 13 வது வார்டு மதிமுக கவுன்சிலர் நர்மதா இளங்கோவன் போட்டியின்றி தேர்வானார்.

பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி வாழ்க்கை குறிப்பு: திருப்பூர் அருகேயுள்ள நல்லூரில், கந்தசாமி - சரோஜினி தம்பதியரின் 2 வது மகளாக கவிதாமணி பிறந்தார். திருப்பூர் பழனியம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை ளுடித்த அவர் திருப்பூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில், பி.பிஎம். பட்டப்படிப்பை முடித்தார். கடந்த 2010ம் ஆண்டு பல்லடம் சேடபாளையம், எஸ்.பி.நடராஜ் மரகதம் தம்பதிகளின் மகனான ராஜேந்திரகுமாரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஷர்விகா (11), ஆதவன் நடராஜ் (6), என 2 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ராஜேந்திரகுமார் கடந்த 2014-ல் பல்லடம் தி.மு.க. நகரச் செயலாளராகவும் தற்போது நகர திமுக பொறுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.  இவர் ஏற்கனவே கடந்த 2006-2011 ம் ஆண்டில் பல்லடம் நகராட்சி 2 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஆக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல்லடம் நகராட்சி 5வது வார்டு உறுப்பினராக கவிதாமணி போட்டியிட்டார்.

Related Stories: