×

ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கூடலூர் நகராட்சி தலைவராக பரிமளா தேர்வு

கூடலூர்,மார்ச்5: நீலகிரி மாவட்டம்  கூடலூர் நகராட்சிக்கும், ஓவேலி, தேவர்சோலை, நடுவட்டம் ஆகிய பேரூராட்சிகளுக்கும் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கூடலூர் நகர்மன்றத் தலைவராக 17 வார்டு உறுப்பினர் வெண்ணிலாவை (திமுக) கட்சி தலைம அதிகாரபூர்வமாக அறிவித்திருந்த நிலையில், நேற்று 12வது வார்டு உறுப்பினர் பரிமளா (திமுக) தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து மறைமுக தேர்தல் மூலம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.  

இதில் 21 கவுன்சிலர்கள் பங்கேற்று வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கையின் போது பரிமளா 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வெண்ணிலா 10 வாக்குகள் பெற்றார். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பரிமளா நகர்மன்ற தலைவர் ஆனார். பரிமளாவை தொண்டர்கள் வாழ்த்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். ஓவேலி பேரூராட்சியில் கட்சியில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட ஐந்தாவது வார்டு உறுப்பினர் சித்ராதேவி (திமுக) போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

தேவர்சோலை பேரூராட்சி தலைவர் பதவிக்கு கட்சி அறிவிக்கப்பட்ட வள்ளியை(திமுக) எதிர்த்து பொன்னி (திமுக) என்பவர் வேட்புமனு தாக்கல் செய்ததை அடுத்து மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் வள்ளி வெற்றி பெற்றார். ஓட்டெடுப்பில் வள்ளி 10 வாக்குகளும் எதிர்த்து போட்டியிட்ட  பொன்னி 8 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

துணைத்தலைவர்கள் தேர்வு
கூடலூர் நகராட்சியின் துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவராஜ் 17 வாக்குகள் பெற்று துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உஸ்மான் 4 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.  ஓவேலி பேரூராட்சியில் திமுகவைச் சேர்ந்த செல்வரத்தினம் 13 வாக்குகள் பெற்று துணைத் தலைவரானார். விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த சகாதேவன் 5 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். தேவர்சோலை பேரூராட்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  யூனஸ்பாபு மொயின் 12 வாக்குகள் பெற்று துணைத் தலைவரானார்.எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த மாதேவ் 6 வாக்குகள் மட்டுமே பெற்றார்.நடுவட்டம் பேரூராட்சியில் திமுகவைச் சேர்ந்த துளசி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Tags : Parimala ,Cuddalore ,
× RELATED சென்னை ஆவடி அருகே தனியார் வங்கி...