×

73 ஆண்டுக்கு பிறகு முதன் முறையாக கோபி நகராட்சியை திமுக கைப்பற்றியது

கோபி, மார்ச் 5: கோபி நகராட்சி உருவான 73 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக நகராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சி கடந்த 1949ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கடந்த 73 ஆண்டுகளில் 4 முறை காங்கிரஸ் கட்சியும், 3 முறை அதிமுகவும், 2 முறை ஜனதா கட்சியும், த.மா.கா ஒரு முறை என நகராட்சி தலைவர்களாக இருந்துள்ளனர்.இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கோபி நகராட்சியில் மொத்தமுள்ள 30 வார்டுகளில் திமுக 14 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், அதிமுக 13 வார்டுகளிலும் சுயேட்சை வேட்பாளர் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றனர்.

இதைத்தொடர்ந்து,  நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக சார்பில் நகர செயலாளர் என்.ஆர்.நாகராஜ் அறிவிக்கப்பட்டார். நேற்று காலை 9.30 மணிக்கு திமுக கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் 16 பேரும், சுயேட்சை கவுன்சிலர் ஒருவரும் நகராட்சி அலுவலகம் வந்தனர்.இந்த தேர்தலில் அதிமுகவை சேர்ந்த 13 கவுன்சிலர்களும் கலந்து கொள்ளவில்லை. இதைத்தொடர்ந்து, நடைபெற்ற மறைமுக தேர்தலில் திமுகவை சேர்ந்த என்.ஆர்.நாகராஜ் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மதியம் நடைபெற்ற துணைத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தீபா போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.நகராட்சி தலைவராக நாகராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர். திமுக வரலாற்றில் முதன் முறையாக கோபி நகராட்சியை கைப்பற்றி உள்ளது குறிப்பிடதக்கது.

Tags : DMK ,Kobe ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி