×

இடைக்கழிநாடு பேரூராட்சியில் பரபரப்பு தேர்தல் அதிகாரிகளை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: துணை தலைவர் தேர்வு ஒத்திவைப்பு

செய்யூர்: செய்யூர் வட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சியின் 21 வார்டுகளில் தேர்தல் நடந்தது. அதில் திமுக 7, அதிமுக 6, சுயேட்சை 3, காங்கிரஸ் 1, பாமக 2, விசிக 1, தேமுதிக 1 இடங்களில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து, பேரூராட்சி தலைவர், துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது.காலை 10.30 மணிக்கு தேர்தல் தொடங்கியது. அதில் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் லட்சுமி சங்கர், அதிமுக சார்பில் சம்யுக்தா ஆகியோர் போட்டியிட்டனர். 21 வார்டு உறுப்பினர்களும் வாக்களிக்க வந்தனர். இதில் சம்யுக்தா 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாகவும், திமுக வேட்பாளர் லட்சுமி சங்கர் 10 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை கேட்டதும், கவுன்சிலர்கள் வாக்களிக்கும் நேரத்தில் தேர்தல் அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டு குளறுபடி செய்ததாக கூறி, தேர்தல் அதிகாரிகளிடம் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், தலைவருக்கான மறுதேர்தல் நடத்த வேண்டும் என சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து சூனாம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி, கலைய செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையில், மதியம் நடக்க இருந்த துணை தலைவர் தேர்தல் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : DMK ,Interstate Municipality ,Vice Presidential ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி