×

முதல் பெண் மேயர் என்ற பெருமையுடன் கோவை மாநகராட்சி 6-வது மேயராக கல்பனா இன்று தேர்வு

கோவை, மார்ச். 3: கோவை மாநகராட்சி 6-வது மேயராக கல்பனா இன்று தேர்வு செய்யப்படுகிறார். முதல் பெண் மேயர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது. கோவை மாநகராட்சிக்கு கடந்த 1996-ம் ஆண்டு முதல்முறையாக தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, திமுக-தமாகா கூட்டணி அசுர பலத்துடன் ஆட்சி அமைத்தது. திமுக அணியில் தமாகாவுக்கு மேயர் பதவி விட்டுக்கொடுக்கப்பட்டது. ராமகிருஷ்ணா குரூப் குடும்பத்தை சேர்ந்த வி.கோபாலகிருஷ்ணன், முதல் மேயராக தேர்வு செய்யப்பட்டார். 2001-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுகவை சேர்ந்த மலரவன் இரண்டாவது மேயராக தேர்வுசெய்யப்பட்டார்.

2006-ம் ஆண்டு மீண்டும் திமுக-காங்கிரஸ் கூட்டணி வென்றது. இப்போதும் மேயர் பதவி, காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காலனி வெங்கடாசலம் மூன்றாவது மேயராக தேர்வு செய்யப்பட்டார். 2011-ம் ஆண்டு மீண்டும் அதிமுக வெற்றி பெற்று செ.ம.வேலுசாமி 4வது மேயராக பதவி ஏற்றார். இவரது பதவிக்காலம் முழுமையாக முடியும் முன்பே 4வது ஆண்டில் ராஜினாமா செய்தார். இதன்பின்னர் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு, அதிமுகவை சேர்ந்த ராஜ்குமார் 5-வது மேயராக பதவி ஏற்றார்.

2016-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. தற்போது நடந்த தேர்தலில் திமுகவை மாபெரும் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து, 19-வது வார்டு திமுக கவுன்சிலர் கல்பனா இன்று (வெள்ளி) 6-வது மேயராக தேர்வு செய்யப்பட உள்ளார். கோவை மாநகராட்சி மேயர் பதவியை திமுக தற்போதுதான் நேரடியாக கைப்பற்றுகிறது. அதுவும், இம்முறை பெண்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டதால், முதல் பெண் மேயர் என்ற பெருமையையும் பெறுகிறார்.

இன்று நடைபெறும் மேயர் தேர்தல் தொடர்பாக, கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை  மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் இன்று (வெள்ளி) காலை  9.30 மணிக்கும், துணை மேயர் தேர்தல் இன்று பிற்பகல் 2.30 மணிக்கும்  மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நடக்கிறது.  தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய சுற்றறிக்கை எண்.யு-38/2022 நாள்  25.02.2022-ன்படி தேர்தல் நடத்தப்படுகிறது.

தேர்தல் அறிவிப்பு நேரத்தில் இருந்து 30  நிமிடங்களுக்குள் பெரும்பான்மையான உறுப்பினர்கள் வருகை தரவேண்டும். இல்லையெனில்,  தேர்தல் ஒத்திவைக்கப்படும். பின்னர், மாநில தேர்தல் ஆணையம் நிர்ணயிக்கும்  மற்றொரு தேதியில் மறைமுக தேர்தல் நடைபெறும். இதனை தவிர்க்கும் பொருட்டு,  மாமன்ற உறுப்பினர்கள், இன்று காலை சரியான நேரத்துக்கு வருகை தர வேண்டுகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார். 2-வது முறையாக மறைமுக தேர்தல் : கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் இதற்கு முன்பாக 2006-ம் ஆண்டு மறைமுகமாக மேயர் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காலனி வெங்கடாசலம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தற்போது, இரண்டாவது முறையாக மறைமுக தேர்தல் இன்று நடக்கிறது.

இதிலும், திமுகவை சேர்ந்த கல்பனா போட்டியின்றி தேர்வுசெய்யப்பட உள்ளார். கடந்த 1996, 2001, 2011, 2014-ம் ஆண்டுகளில் மொத்தம் நான்கு முறை மேயர் தேர்தல், நேரடியாக நடத்தப்பட்டது. மக்கள் நேரடியாக வாக்களித்து மேயரை தேர்வுசெய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கோவையை முதலிடத்துக்கு கொண்டு வருவேன் : கோவை மேயராக இன்று பதவி ஏற்க உள்ள கல்பனா கோவை மணியக்காரம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

அவர் கூறுகையில், ‘’மேயர் வேட்பாளராக என்னை தேர்வு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி  ஸ்டாலின் எம்எல்ஏ, மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கோவை  மாவட்ட  திமுக பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கோவை  மாநகராட்சியில் பகுதியில், குடிநீர், தெருவிளக்கு, தார்சாலை, சுகாதாரப்பணி, மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை திட்டம் என அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, கோவையை, முதல் இடத்திற்கு கொண்டு வருவேன்.நான்  மிகவும் சாதாரண குடும்ப பின்னணியில் இருந்துதான் வருகிறேன். தனியார்  டைமண்ட் நிறுவனத்தில் தான் வேலை பார்த்தேன். எனது கனவர் இ-சேவை தொடர்பான  பணிகளை செய்து வருகிறார்’’ என்றார்.

துணை மேயர் வெற்றிச்செல்வன் : கோவை மாநகராட்சியின் துணை மேயராக 92-வது வார்டு திமுக கவுன்சிலர் வெற்றிச்செல்வன் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளார். இவர், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வசிக்கும் கோவை சுகுணாபுரம் வார்டில் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளர் செல்லப்பன் என்பவரை 456 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். முன்னாள் அமைச்சரின் வார்டில் வெற்றிபெற்ற காரணத்தால், இவரை, துணை மேயர் பதவி தேடி வந்துள்ளது. திமுக சார்பாக துணை மேயர் பதவிக்கு போட்டியிடும் வெற்றி செல்வன் கூறுகையில், ‘‘ எதிர்பாராத பதவி. துணை மேயராக திறம்பட செயல்படுவேன். பில்டிங் மெட்டிரியல்ஸ் தொடர்பான தொழில் தான் செய்து வருகிறேன். திமுகவில் சாதாரண தொண்டனுக்கும் பதவி கிடைக்கும் என்பதற்கு நான் உதாரணம். குடிநீர் பிரச்சனை, பாதாள சாக்கடை பணிகள், சாலை வசதி, மேம்பாலங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் தரப்படும்’’ என்றார்.

Tags : Kalbana ,Govu Municipality ,
× RELATED கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்