×

விருத்தாசலம் நகர்மன்ற தலைவர் துணைத்தலைவராக பெண்கள் அறிவிப்பு

விருத்தாசலம், மார்ச் 4:   விருத்தாசலம் நகராட்சியில் தற்போது நடந்து முடிந்த நகர மன்ற தேர்தலில் 33 வார்டுகளில் 21 இடங்களை திமுக கைப்பற்றியது. மீதமுள்ள 6 இடங்களை அதிமுகவும், 3 இடங்களை பாமகவும், 2 சுயேட்சை மற்றும் தேமுதிக ஒரு இடமும் பெற்றது. இதில் 20வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சங்கவி முருகதாஸ் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து 21 இடங்களை கைப்பற்றிய திமுகவில் டாக்டர் சங்கவி முருகதாஸ் விருத்தாசலம் நகரமன்ற தலைவராக  தேர்ந்தெடுக்கப்படுவார் என திமுக தலைமை அறிவித்துள்ளது. டாக்டர் சங்கவி முருகதாஸ் விருத்தாசலம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ மறைந்த குழந்தை தமிழரசனின் மகள் ஆவார். 17.03.1991ல் பிறந்த இவர் எம்பிபிஎஸ் படித்துவிட்டு தனது கணவரான டாக்டர் முருகதாஸ் உடன் விருத்தாசலம் மேலக்கோட்டை வீதியில் எம்டிபி கிளினிக் நடத்தி கொண்டு குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வருகிறார்.   

 இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டிலிருந்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சிப் பணி மற்றும் பொது பணியில் ஈடுபட்டு வருகிறார். தற்போது நடந்த நகர மன்றத் தேர்தலில் 20வது வார்டில் வெற்றி பெற்று விருத்தாசலம் நகர மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. அதுபோல் துணை தலைவராக பொறுப்பேற்க உள்ள ராணி தண்டபாணி, பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் திமுக நகர செயலாளர் தண்டபாணியின் மனைவி ஆவார். இவர் கடந்த இரண்டு முறை நகரமன்ற உறுப்பினராக இருந்து வந்தவர். தொடர்ந்து பல வருடங்களாக கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்தார். தற்போது 28வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டுவெற்றி பெற்றுள்ள இவருக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. விருத்தாசலம் நகராட்சியில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் இருவரும் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் விருத்தாசலம் தொகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Tags : Vriddhachalam Town Council ,
× RELATED விருத்தாசலம் நகர்மன்ற ஆலோசனை கூட்டம்